புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்யவேண்டுமென கோரி கடந்த 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தை எதிர்வரும் 7ஆம் திகதி வரை ஒத்திவைக்கவுள்ளதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
மதுரையில் நேற்று (திங்கட்கிழமை) ஜாக்டோ- ஜியோ அமைப்பின் உயர்மட்ட குழு கூட்டமொன்று நடைபெற்றது. அக்கூட்டத்தின் பின்னர் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் வின்சென்ட் பால்ராஜ், மகேந்திரன், சுப்பிரமணியன் ஆகியோர் ஊடகவியலாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது,
“புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்யவேண்டும், 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் ஆகியவை உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4ஆம் திகதி முதல் காலவரையற்ற போராட்டத்தை நடத்தவுள்ளதாக நாம்அறிவித்து இருந்தோம்.
இருப்பினும் நீதிமன்றத்தில் இவ்விடயம் தொடர்பில் வழக்கு நடைபெற்று வருகின்றமையால் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம்.
மேலும் எங்களது வழக்கு நேற்று (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது, எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதிக்குள் அரசு எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆகையால், எங்களது போராட்டத்தை எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி வரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்” என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.