இந்தப்படம் இப்போது நான் செய்துமுடித்த ஒரு சீசர் சத்திரசிகிச்சையின்போது எடுத்தது. வழமையாக இப்படியொரு சத்திரசிகிச்சையின்போது ஒரு தாதி பக்கத்திலிருந்து தேவையான உபகரணங்களை எடுத்துத் தருவார்.
எதிர்த்திசையில் ஒரு வைத்தியர் நின்றுகொண்டு உதவிசெய்வார். இங்கே உதவிக்கு வைத்தியர் இல்லாமல் தாதி எதிர்த்திசையில் நின்றுகொண்டு உதவி செய்ய நான் சத்திர சிகிச்சை செய்யவேண்டிய நிலை.
என்ன காரணம்?
எனக்கு உதவியாக இப்போது இரண்டு வைத்தியர்களே உள்ள நிலை. ஒருவர் வீக்கெண்ட் வீட்டுக்குப்போய்விட்டதால் மற்ற வைத்தியர் மூன்று நாட்கள் இரவு பகலாக கடமை செய்து, இன்றும் பின்னேரம் வரை வேலை செய்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்.
அவரை மீண்டும் இரவு 7 மணிக்கு உதவிக்கு அழைப்பது நியாயமில்லை. வீடு சென்று இரவு முழுவதும் பிரயாணம் செய்துவந்த மற்றைய பெண் வைத்தியர் காலை கிளினிக் முடித்துவிட்டு தொடர்ச்சியாக விடுதி வேலைகளைப் பொறுப்பெடுத்துக்கொண்டார்.
அவர் இன்று இரவு முழுவதும் கடமையில் இருந்து , நாளை காலை சத்திரசிகிச்சைக்கூட கடமைக்கு வந்து அது முடியும் வரை கடமையில் இருக்கவேண்டும். பின்னேரம் 5 மணிக்கு ஒரு சத்திர சிகிச்சை செய்யும்போது உதவிக்கு அவர்தான் வந்தார்.
பிரயாணக்களைப்பும் தொடர்ச்சியான வேலைக்களப்பிலும் சோர்ந்துபோயிருந்தார். போதாக் குறைக்கு தொடர்ச்சியாக நாளை பின்னேரம் வரை கடமையில் இருக்கவேண்டும்.
எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு நான் தனியாக சத்திர சிகிச்சையைச் செய்துகொள்கிறேன் என அவரை கொஞ்சம் ஓய்வெடுக்கும்படி அனுப்பி விட்டேன். ஓய்வெடுக்கப்போனவர் ரெண்டு மணிநேரத்தில் அழைப்பெடுத்து இன்னொரு குழந்தை சிக்கலாக இருப்பதாக அறிவித்தார்.
அந்தக் கர்ப்பிணியைப் பார்த்து அவசரமாக சத்திர சிகிச்சை செய்யவேண்டும் என முடிவெடுத்து, தனியாக செய்தபோது எடுத்த படம்தான் இது.
இதற்கு யார் பொறுப்பு?
திடீரென குறைந்தது 4 உதவி வைத்தியர்கள் இருக்கவேண்டிய நிலையில் 2 ஆக குறைய விடாமல் தடுப்பதற்கு யார் பொறுப்பு? இதற்கான பதில் எனக்கு இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது.
அமைச்சிலே போய்க் கேட்டால், அவர்கள் அடுத்த இடமாற்றத்தின்போது ஒரு வைத்தியர் தருவதற்கு ஒத்துக்கொண்டு விட்டார்கள். அதற்குமுன் தற்காலிகமான தீர்வை செய்யவேண்டியது, மாகாண சுகாதார சேவை என்று கையை விரித்து விடுவார்கள். அதுதான் சரியும் கூட.
ஆனால், யாழ்ப்பாணத்தில் இரண்டாவது பெரிய வைத்தியசாலையில், மகப்பேற்று மருத்துவத்துக்குக் ஏற்பட்டிருக்கும் நிலமை இது.
என்னோடு சேர்ந்து 5 பேருக்கு இந்தத் தற்காலிக அப்பொயின்மெண்ட் கொடுக்கப்பட்டபோது வழங்கப்பட்ட ஐந்து இடத்தில் எனது வ ட்டுக்கு 3 மணிநேரத்தில் போகக்கூடிய ஒரு சிங்கள பிரதேச வைத்திய சாலையும் இருந்தது.
தெரிவிலே முதலில் இருந்த எனக்கு எந்த ஒரு வைத்தியசாலையையும் தெரிவு செய்யும் வாய்ப்பு இருந்தபோதும், வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த வைத்திய சாலையை விட்டுவிட்டு பருத்தித்துறையைத் தேர்வு செய்தேன் . அதைச் சொன்னபோது என்னைவிட சந்தோசப்பட்டது என் வீட்டில் இருந்தவர்கள்.
யாருக்குமே வடமாராட்சியோடு தொடர்பு இல்லாதபோதும் , அவர்கள் சொன்னது, பரவாயில்லை நம்மட சனத்துக்காக கொஞ்சகாலமாச்சும் வேலை செய்யலாமே என்று.
அந்தச் சிங்களப்பிரதேசத்துக்குப் போயிருந்தால் ஒவ்வொரு சனியும் காலை காரை எடுத்து 3 மணிநேரத்தில் வீடு சென்று பிள்ளையைக் கொஞ்சி இருப்பேன். இந்த மாதிரி சத்திர சிகிச்சைகளை உதவி வைத்தியர்களைச் செய்யசொல்லிவிட்டு கால் மேல் கால் போட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்திருப்பேன்.
இங்கே ஒரு வைத்திய நிபுணராக கடமை செய்யும்போதும், நோயாளிகளுக்காக ஒரு உதவி வைத்தியரின் கடமையை மட்டுமல்ல ஒரு அட்டெண்டனின் கடமையைச் செய்யவும் நான் ரெடி.
தேவையேற்படும்போது நான்மட்டுமல்ல நிறைய வைத்தியர்கள் அவ்வாறு செய்வது வழமை, ஆனால் நம் ஊரில் ஒரு வைத்திய நிபுணராக விரும்பி வந்திருப்பவர் வேலை செய்ய அடிப்படை வசதிகளையாவது செய்து கொடுக்கவேண்டுமென சம்பந்தப்பட்ட நம் பிரதேசத்து அதிகாரிகள் சிந்திக்காமல் இருப்பது பெரும் ஏமாற்றமாக இருக்கிறது.
அடுத்தமுறை இங்கே வர விரும்பும் ஒரு நிபுணர் என்னிடம் கேட்டால், பருத்தித்துறையில் இப்படி நடந்தது என்று உண்மையைச் சொல்லத்தான் வேண்டும். பொய் சொல்லி ஒருவரை என்னால் ஏமாற்ற முடியாது. அதனால் யாரும் இங்கே விரும்பி வரப்போவதில்லை.
கடைசியாக வெளிநாட்டுப்பயிற்சி முடித்துவந்த 5 VOG மாரும் வடக்கு மாகாணத்திற்குத்தான், அனுப்பப்பட்டுள்ளார்கள். இருந்தாலும், இன்னும் நிபுணருக்கான தட்டுப்பாடு உள்ளது. வருபவர்கள் ஏன் வேலையை ரிசைன் பண்ணிவிட்டுப்போகிறார்கள் என இப்போது புரிகிறது.
கடந்த நாட்களில் இது பற்றி எல்லோரிடமும் கோரிக்கை விடுத்து, சிலரிடம் பேச்சும் வாங்கி, இனி இருக்கும்வரை இப்படியே சமாளிப்போம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். தொடர்ச்சியான வேலைப்பளுவை சமாளிக்க ஒவ்வொரு வீக்கெண்டும் வீட்டுக்குப்போவது என்று முடிவெடுத்துள்ளேன்.
நான் இங்கே இருக்கும்வரை ஒரு வைத்தியர் மிஞ்சினாலும் கிழமை நாட்களில் கர்ப்பிணிகளுக்குத் தேவையான சேவை தொடரும். வார இறுதி நாட்களிலும், சிலவேளை வெள்ளியிலும் தேவையான நோயாளிகளை யாழ்ப்பாணத்துக்கு அனுப்புவதைவிட வேற வழியில்லை.
இப்போதைக்கு சனிக்கிழமை நடைபெறும் குடும்பக்கட்டுப்பாட்டு கிளினிக்கை மட்டும் நிறுத்த அனுமதி கோரியுள்ளேன்.
ஆனால் கர்ப்பிணிகள் கிளினிக் நான் தனியாக இருந்தால் கூட நடைபெறும்.
இது என்னைப்போல பலருக்கு இருக்கும் நடைமுறைச் சிக்கலை மக்களுக்குச் சொல்வதற்காக எழுதியது. தயவு செய்து இதிலேவாழ்த்துக்கள் அது இது என்று கருத்திட்டு ஒரு தற்புகழ்ச்சிப் பதிவாக்கி விடாதீர்கள்.