மரணம் யாரை எப்போது தழுவும் என்று யாரும் அறியோம். அப்படி ஒரு திடீர் பேரிழப்பு இன்றைய தினம் இணுவிலில்.
அதிகாலை 2.30 மணியளவில் இணுவிலில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவசர நோயாளர் காவு வண்டிக்கு அழைப்பேற்படுத்தியிருந்தார். உடனடியாக நோயாளர் காவு வண்டி அவரது வீட்டுக் சென்றது. நோயாளர் காவு வண்டியில் அவர் ஏறி உட்கார்ந்த பின்னர் சுயநினைவிழந்து விட்டார்.
யாழ் போதனா வைத்தியசாலையின் இதய சிகிச்சை நிபுணர்கள் தீவிர சிகிச்சையளித்த போதும், அவரை காப்பாற்ற முடியவில்லையென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
முல்லை மாவட்ட வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளரும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணரும் எமது விஞ்ஞான ஆசானுமாகிய அம்பலவாணர் ரகுபதி அவர்கள் காலமான செய்தி எம்மையெல்லாம் ஆறா துயரில் ஆழ்த்தி உள்ளது.
இணுவிலில் பெயர் சொல்லக்கூடிய ஒருவர். அனேகமாக எம் ஊரவர்களினால் டொக்டர் ரகு என்று அனைவராலும் அழைக்கப்படும் அம்பலவாணர் ரகுபதி ( Ambalavanar Ragupathy ) அவர்களின் இன்றைய மரணச்செய்தி கேட்டு அனைவரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தோம்.
ஒரு பொதுவைத்திய நிபுணராக மருத்துவ ஆலோசகராக எம் ஊரவர்களுக்கும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் நோயாளர்களுக்கும் தன்னால் ஆன அளப்பரிய சேவையை ஆற்றியுள்ளார் என்பது நிச்சயம் பெருமைப்பட வேண்டிய விடயம்.
யாரை கண்டாலும் தன்னை விட வயதில் சிறியவனாக இருந்தாலும் சரி அல்லது பெரியவராக இருந்தாலும் சரி அவர் உந்துருளியில் போகும் போது வீதியில் கண்டாலோ அல்லது எங்காவது நிகழ்வுகள் ஆலய விழாக்களில் கண்டாலோ ஒரு இன்முகத்துடன் புன்முறுவல் செய்துவிட்டு தான் கடந்து செல்வார். அப்படி குணத்தில் இனிய பண்பாளன்.
ஆலய விழாக்களில் சுவாமி காவுதல் என ஆலயத்திற்கு தன்னாலான சரீர தொண்டுகளையும் பல உதவிகளையும் செய்பவர்.
லண்டன், கனடா, அவுஸ்ரேலியா என புலம்பெயர்ந்து எம் தமிழ் உறவுகள் வசிக்கும் எந் நாட்டிலும் இவர் மருத்துவராக பணிபுரிந்திருக்க முடியும். ஆனால்
அவற்றையெல்லாம் விட்டுவிட்டு லண்டனில் சத்திர சிகிச்சை நிபுணருக்கான உயர் படிப்பை கற்று விட்டு மீண்டும் எம் மண்ணிலே வந்து சேவை செய்து கொண்டிருந்த ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டோம்.
அன்னாரின் ஆத்மா சாந்திஅடைய பிரார்த்தனை செய்வதோடு குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்.