டெல்லியில் மஹிபால்பர் என்கிற இடத்தில் குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு திரும்பிய 28 வயது பெண்ணை அவரது கணவர் நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 வருடத்துக்கு முன்பு கவிதா குமாரி மற்றும் ஹர்கேஷ் குமார் இருவருக்கும் திருமணம் இடம்பெற்றுள்ளது.
தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முன்னதாக ஹர்கேஷ் குமாக்கு இருந்த தீவிர போதை பழக்கத்தாலும், அதனால் அவர் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அவர் கொடுத்த துன்புறுத்தல் காரணமாகவும் கடந்த 2016இல் கவிதா குமாரி தன் கணவரது வீட்டை விட்டு வெளியேறி தன் அம்மா வீட்டில் தங்கி வேலைக்குச் சென்று தன் இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஹர்கேஷ் குமார் நேற்று முன்தினம் தன் நண்பர்கள் இருவருடன் தன் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு வந்துள்ளார்.
கவிதா குமாரி குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு திரும்பும்போது திடீரென அவரின் அருகில் வந்த ஹர்கேஷ் குமார் சட்டென துப்பாக்கி எடுத்து கவிதாவை சுட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதேவேளை, அருகில் இருந்த சிசிடிவியில் பதிவான இந்த சம்பவத்தின் காட்சிகளைக் கொண்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான கவிதா, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.