மூதூர் மட்டகளப்பு வீதி பெரியபாலப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (11) இரவு 8 மணியளவில் இடம்பெற்றது. மணல் லொறி ஒன்று வீதியால் சென்ற துவிச்சக்கர வண்டி ஒன்றின் மீது மோதியதாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இவ்விபத்தின் போது மூதூர் சாபி நகரை பிறப்பிடமாகவும் ஆலிம் நகரில் வசித்தவருமான மஹ்ரூப் மஃசூம்(29) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.
விபத்தை அடுத்து அப்பகுதியில் ஒன்று கூடியவர்களால் வீதி மறிக்கப்பட்டு ரயர்கள் எரிக்கப்பட்டது. அத்துடன் அருகில் இருந்த பொலிஸ் காவலரணும் தாக்குதலுக்கு உள்ளாகி எரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பொலிஸாருடன் மக்கள் இணைந்து சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக மூதூர், கிண்ணியா மற்றும் அதனை அண்டி பகுதிகளில் நிகழும் வீதி விபத்து மரணங்களில் கூடுதலானவை இந்த மணல் ஏற்றிவரும் டிப்பர் வாகனங்களாலேயே நிகழுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.