ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதியிழக்கச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் யாதுரிமைப் பேரணை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 91(1)(ஈ)பிரிவை மீறியதாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சர்மிளா ரொவீனா ஜயவர்த்தன கோணவல என்ற கொழும்பு மாநகர சபையின் சிறிலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினரே குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான ரணில் விக்கிரமசிங்க அரசுத்துறை வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றின் காசோலைப் புத்தகங்களை அங்கு அச்சிட்டார் எனத் தெரிவித்தே ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இடைநிறுத்தி இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த-2000 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தொடர்ந்த இது போன்றதொரு வழக்கில் ஐக்கியதேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டமையையும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.