விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது ஒரு விமானிக்கு திடீர் என முச்சு விட முடியாமல் போன நிலையில் அவரது உயிரை அதே விமானத்தில் பயணித்த இந்திய டாக்டர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். இச்சம்பவம் தற்போது பெரும் வைரலாக பரவி வருகிறது.
பாரிஸிலிருந்து பெங்களூருவிற்கு ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அந்த விமானத்தில் ஐரோப்பா நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் இந்தியாவைச் சுற்றிப் பார்க்கவும் இந்தியாவிலிருந்து பிரான்ஸ் சென்ற சுற்றுலா பயணிகள் சிலர் மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பிக் கொண்டுமிருந்தனர்.
விமானம் நடுவானில் வந்து கொண்டிருந்த போது ஐரோப்பா நாட்டை சேர்ந்த பயணி ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
அவர் சுயநினைவற்ற நிலைக்கு சென்றார். இதை கவனித்த விமான பணிப்பெண்கள் சிலர் அவருக்கு உதவி செய்ய நினைத்தனர்.
ஆனால்,அந்த விமானத்தில் ஒரு நர்ஸ் மட்டுமே இருந்தார். அவரும் எவ்வளவோ முயன்றும் அவரை சுயநினைவிற்கு கொண்டு வரமுடியவில்லை. உடனடியாக விமானப்பணி பெண்கள் பயணிகள் பட்டியலை பார்க்கும் போது அதில் டாக்டர் ஒருவர் இருந்தை கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த டாக்டரிடம் சென்று உதவி கேட்டனர். அவரும் நிலைமை புரிந்து உடனடியாக உதவ ஒப்புக்கொண்டு உடல் நிலை பாதிக்கப்பட்டவரிடம் சென்றார்.
அவரது இதயத் துடிப்பைப் பரிசோதித்த போது அவருக்கு இதயத்துடிப்பு இருந்தது. ஆனால் அவருக்கு மூச்சுத் தான் விட முடியவில்லை.
உடனடியாக அவர் மூச்சு விடுவதற்கான மசாஜை அளிக்கத் தொடங்கினார். அவருக்கு விமானப் பணிப் பெண்களும் உதவினர். கடும் பேராட்டத்திற்கு பிறகு அந்த ஐரோப்ப பயணி மூச்சு விட ஆரம்பித்தார். பின்னர் அவருக்கு சுய நினைவு வந்து விட்டது.
சுயநினைவின்றி முச்சு விடமுடியாமல் கிடந்த ஐரோப்ப பயணிக்கு உதவியது வேறு யாரும் இல்லை இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் பிரபுலிங்கசுவாமி தான். ஓய்வு பெற்ற டாக்டரான இவர் தற்போது மைசூருவில் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். அதிஷ்ட வசமாக அந்த விமானத்தில் அந்த ஒரு பயணி மட்டுமே டாக்டராக இருந்துள்ளார்.
விமானம் பெங்களூருவில் தரையிறங்கியதும் ஐரோப்ப பயணி விமான நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த விமானத்தை ஓட்டி வந்த விமானி டாக்டர் பிரபுலிங்கசுவாமிக்கு நன்றி கூறினார்.
மேலும் ஏர் பிரான்ஸ் நிறுவனம் தனது விமானத்தில் வந்த டாக்டர் ஒருவர் அதே விமானத்தில் உயிருக்கு போராடிய பயணியின் உயிரை காப்பாற்றியதற்காக அந்த டாக்டருக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதமும் 100 யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் எட்டாயிரம் ரூபா மதிப்பிலான வவுச்சரையும் பரிசாக வழங்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.