தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சூர்யா மன்றத்தினர் செய்த உதவியை சீமான் வெகுவாக பாராட்டியுள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தஞ்சாவூரும் ஒன்று, தஞ்சாவூர் மாவட்டத்தின் திருச்சிற்றம்பலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களூக்கு சூர்யா ரசிகர் மன்றத்தினர் உணவு வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆராய்ந்த அகில இந்திய சூர்யா ரசிகர் மன்றத் தலைவர் பரமு, மக்களுக்கு நல்ல சாப்பாடு போட வேண்டும்.
அது ஒரு பிரம்மாண்ட விருந்தாக இருக்க வேண்டும், அதற்கான ஏற்பாடு செய்யுங்கள் என்று நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். இதையடுத்து 2,000 பேருக்கு உணவு தயாரானது. உணவு தயாராகிக் கொண்டிருந்த போதே, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று பரமு யோசித்துள்ளார்.
அப்போது அருகில் இருந்த நிர்வாகி ஒருவர், இன்று தஞ்சையில்தான் சீமான் இருக்கிறார். அவரை அழைத்துப் பேச வைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதையடுத்து சீமானிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். சீமானும் நல்ல வேலை செய்கிறீர்கள், நானும் வருகிறேன் என்று கூறி அங்கு சென்றுள்ளார்.
தற்போது உணவு தயாரிக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. அந்த மக்கள் மத்தியில் நீங்கள் 1 மணி நேரம் பேச வேண்டும். அதற்குள் உணவு தயாராகிவிடும்’ எனக் சூர்ய மன்ற நிர்வாகி கூற சீமான் மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் பேசினார்.
அதில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தென்னை மரக்கன்று வேண்டுமா…எனக்கு போன் பண்ணுங்கள். உடனே ஏற்பாடு செய்து தருகிறேன். இன்றைக்கு நிறைய நல்ல மனிதர்கள் வந்துவிட்டார்கள். அவர்களிடம் நீங்கள் உதவிகளைக் கேட்டுப் பெறலாம். அரசாங்கம் செய்யாது.
மற்றவர்கள் உதவி செய்ய நம்மைத் தேடி ஓடோடி வருவார்கள். கேரளா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளை நாம்தானே சீர்திருத்தினோம். இந்தப் புயலால் ஏற்பட்ட சீரழிவைச் சரிசெய்ய முடியாதா? சூர்யா மன்றத்தினர் மக்களுக்குச் செய்யும் உதவி, மிக முக்கியமானது என்று வெகுவாக பாராட்டினார்.
சீமான் உரைக்கு பின் சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகள் நீங்களும் சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தவே அவரும் மக்களோடு மக்களாக அமர்ந்து சாப்பிட்டார். அந்த புகைப்படமும் இணையதளங்களில் வைரலாக பரவியது.