வடக்கு,கிழக்கிற்கு அதிகாரங்களைப் பகிர்வது, அரசியல் கைதிகள்,காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஐக்கியதேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்துள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு பெரும்பான்மை ஆதரவை பெறுவதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை அடிப்படையிலேயே ஆதரவு வழங்கியுள்ளது. இதன்போது முன்வைக்கப்பட்டவை அனைத்தும் கூட்டமைப்பின் வழக்கமான கோரிக்கைகள் தான்.
நாங்கள் அதிகாரப் பகிர்வைக் கேட்டோம். அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் தொடர வேண்டும் என்பதே அதன் அர்த்தம்.
வடக்கிலுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். இது இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகள் மாத்திரமல்ல. தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளையும் சேர்த்தே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் தேசிய பூங்காக்கள் என தனியார் காணிகளை அதிகாரிகள் பிடித்து வைத்துள்ளனர். எல்லா காணி பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புடனேயே வடக்கில் அனைத்து அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்வைத்திருந்தது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.