நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு வழங்கப்படவுள்ளது.
கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்த ஜனாதிபதி மைத்திரி, கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலையும் அறிவித்தார்.
இது அரசியலமைப்பிற்கு முரணானதென தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரகாரம், நாடாளுமன்ற கலைப்பிற்கு கடந்த நவம்பர் மாதம் 13ஆம் திகதி உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்தது.
அதன் பின்னர் குறித்த மனுக்கள் மீதான விசாரணை இடம்பெற்றது. பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் பிரியந்த ஜயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டன.
ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட 13 தரப்பினர் இந்த மனுக்களை தாக்கல் செய்தன.
இதனையடுத்து தனது தரப்பு அறிக்கையை நீதிமன்றில் தாக்கல்செய்த சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, இந்த மனுவை விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என தெரிவித்திருந்தார்.
இந்த மனுக்களின் இடைநிலை மனுதாரர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, பேராசிரியர் சந்தன ஜயசுமன, சட்டத்தரணி பிரேமநாத் தொலவத்த உள்ளிடோர் வழக்கிற்குத் தேவையான மேலதிக சான்றுகளை நீதிமன்றில் முன்வைத்தனர்.
இதற்கமைய அனைத்து தரப்பு வாதங்களையும் செவிமடுத்த உயர்நீதிமன்றம் கடந்த 7ஆம் திகதி விசாரணைகளை முடிவுறுத்தியது. அத்தோடு, தீர்ப்பு வழங்கப்படும்வரை இடைக்கால தடை அமுலில் இருக்குமென்றும் உயர்நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.