வட்டுக்கோட்டை கிழக்கில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகள் திருட்டு என்று வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் முறைப்பாட்டாளரின் மகள்தான் நகைகளைத் திருடினார் என்பது தெரியவந்தது. சந்தேகநபரான அந்த இளம் பெண் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டுக்கோட்டை கிழக்கில் நேற்று செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகள் திருட்டு என்று உள்ளூர் பத்திரிகையில் செய்தி வெளியாகியது. வீட்டின் குடும்பத்தலைவரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அந்த செய்தி வெளியாகியிருந்தது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். திருடப்பட்ட நகைகள் வீட்டு வளவுக்குள் போடப்பட்டிருந்தன. அவற்றை அந்த வீட்டு வளவுக்குள் வீசிவிட்டு அதுதொடர்பில் இளைஞன் ஒருவர் அலைபேசியில் அழைப்பு எடுத்து முறைப்பாட்டாளரின் மனைவிக்கு நகைகள் போடப்பட்டுள்ள இடம் தொடர்பில் தகவல் வழங்கியுள்ளார்.
அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், தனது தாயாரின் நகைகளைத் திருடிய முறைப்பாட்டாளரின் மகள், அவற்றை தனது காதலனிடம் வழங்கியுள்ளார் எ்ன்பது தெரியவந்தது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து தடயங்களை சேகரித்ததால், அந்த இளைஞன் தனது காதலி வழங்கி நகைகளைக் கொண்டு வந்து வீட்டு வளவுக்குள் வீசிவிட்டுச் சென்றுள்ளார்.
அதனால் வீட்டிலிருந்த நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் முறைப்பாட்டாளரின் மகள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். நகைகள் நேற்றுச் செவ்வாய்க்கிழமை அல்ல அதற்கு முன்னரே திருடப்பட்டுள்ளன என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.