ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான முறிவடைந்த உறவை புதுப்பித்து, மீண்டும் கைகோர்த்து ஆட்சியை கொண்டுசெல்வோம் என, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐ.தே.க.வுடன் மீண்டும் கூட்டணி சேரப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், அலரி மாளிகையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சஜித் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஜனாதிபதி- பிரதமர் இடையில் காணப்பட்ட நல்லாட்சி விவாகம் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி விவாகரத்து பெற்றது.
இவர்கள் மீண்டும் இணைய முடியாதென பலர் குறிப்பிட்டனர். ஆனால், அந்த கூற்றை பொய்யாக்கி மீண்டும் கைகோர்த்து ஆட்சியை கொண்டுசெல்வோம்.
சூழ்ச்சிக்காளரர்கள் பலாத்காரமாக ஆட்சியை பிடித்து, நீதித்துறை, நாடாளுமன்றம், அரசியலமைப்பு என்பவற்றை மதிக்காமல் ஆறு வார காலம் பாதாளத்திற்கு தள்ளினர். அதுமாத்திரமன்றி திறைசேரியிலிருந்து பணத்தையும் முழுமையாக சுரண்டியுள்ளனர்.
ஆனால், இவர்களது பணத்திற்கு எமது உறுப்பினர்கள் அடிபணியவில்லை. நாம் டீல் போடவில்லை. எந்தவொரு குழுவுடனனும் ஒப்பந்தம் செய்யவில்லை. மக்களுடன் சமூக ரீதியில் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளோம். அதனை நிறைவேற்றவே பாடுபட்டோம்.
நாட்டில் காணப்படும் பேதங்களை தவிர்த்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, ஒரு நிழலின் கீழ் செயற்படுவதே எமது நோக்கம். அதனை செயற்பட விடாது தடுத்தமை தேசத்துரோகம்.
நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை நாமே உறுதிப்படுத்தினோம். அதன்மூலம் அரசியலமைப்பை பாதுகாத்துள்ளோம். அதன் பிரகாரம் எமது எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுப்போம். நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என யாரும் கூமுடியாது. ஒரே கொள்கையின் கீழ் அனைவரும் செயற்படுவது அவசியம்.
மக்கள் தெரிவில் வந்தவர்கள் நாடாளுமன்றத்தில் நடந்துகொண்ட விதத்தை பார்த்தீர்கள். சபாநாயகரை தாக்கி, மைக்ரோ போனை உடைத்து, மிளகாய் தூள் வீசி, பாதுகாப்பு தரப்பையும் தாக்கி அநியாயம் செய்தவர்களுக்கு பாதுகாப்பபுத் தரப்பினரின் உரிமை பற்றி கதைக்க எவ்வித அருகதையும் இல்லை. புலிகளின் அச்சறுத்தலின் பின்னர் எமது பாதுகாப்புத் தரப்பினர் எதிர்கொண்ட பாரிய அச்சுறுத்தல் இது. இந்த ஒழுக்கமற்ற செயற்பாட்டை நாடே பார்த்தது. அதற்கெதிராகவே மக்கள் அனைவரும் எம்முடன் கைகோர்த்தனர்.
அரசியலமைப்பை எட்டி உதைத்து, எதனையும் சாதிக்க முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது. புது தேசம், அபிவிருத்தி, சுபீட்சம் நிறைந்த நாட்டை கட்டியெழுப்புவோம்” எனத் தெரிவித்தார்.