சீனாவில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு கனடா பிரஜைகளை கனடாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.
வோஷிங்டனில் நடைபெற்ற கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் மற்றும் கனேடிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான் ஆகியோருடன் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இதன் போது இரண்டு கனேடியர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இந்த விடயத்தில் அவர்களை மீண்டும் நாட்டுக்கு திரும்புவதை உறுதிப்படுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு அமெரிக்காவின் குடிமக்களாக இருந்தாலும் சரி, அல்லது மற்ற நாடுகளின் குடிமக்களாக இருந்தாலும் சரி குடிமக்களை ஒழுங்கக நடத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
கனடாவின் முன்னாள் இராஜதந்திரியான மைக்கல் கோவ்றிங் மற்றும் தொழில் முனைவரான மைக்கல் ஸ்பாவோர் ஆகியோரை கைது செய்துள்ள சீன அரசாங்கம், அவர்கள் தமது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தார்கள் என குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.