மும்பை விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, விமானம் நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டள்ளது.
மும்பையில் இருந்து லக்னோவுக்கு இண்டிகோ பயணிகள் விமானம் இன்று (சனிக்கிழமை) காலை 6.05 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது.
இந்நிலையில், விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்ததையடுத்து, விமான புறப்பாடு நிறுத்தப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, விமானம் முழுவதும் தீவிர சோதனையிடப்பட்டது.
மேலும், சோதனையில் சந்தேகப்படும்படியான எந்த பொருளும் கண்டறியப்படவில்லை என்பதுடன், விமானம் பாதுகாப்பாக இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளுக்குப் பிறகு, பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்டது. வெடிகுண்டு சோதனை காரணமாக சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றுள்ளது. குறித்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக இண்டிகோ அதிகாரி கூறும்போது,
“வேறு ஒரு தனியார் விமானத்தில் வருகைதந்திருந்தபயணி, இண்டிகோ சோதனை மையத்திற்கு வந்து சில நபர்கள் இருக்கும் புகைப்படங்களைக் காண்பித்து, அந்த நபர்கள் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருக்கலாம் என்று கூறினார். இதையடுத்து விமானத்தில் தீவிர பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், தகவல் தெரிவித்த குறித்தபயணி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளதாகவும்” கூறினார்.