அஜித் – சிவா கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ படம் வரும் பொங்கலன்று வெளியாகவுள்ள நிலையில், அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க, படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தில் பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது. தந்தி தொலைக்காட்சியில் தலைமை செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய ரங்கராஜ் பாண்டே கடந்த சில நாட்களுக்கு முன் தன் வேலையை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து அவர் நடிகர் ரஜினிகாந்துடன் அரசியலில் கூட்டணி அமைக்க இருப்பதாகவும், பாரதிய ஜனதா கட்சியில் சேரவுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் அஜித் படத்தில் நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியையும், மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது
இதேவேளை, இதே போல் டிவி வர்ணனையாளர் கோபிநாத்தும் சினிமாவில் பிரவேசம் செய்து பின்னர் மீண்டும் டிவி நிகழ்ச்சிக்கே சென்றது குறிப்பிடத்தக்கது