உலக நாடுகள் பல தொடர்ந்து கடன் வாங்கிக்குவிப்பதால் ஒவ்வொரு குடிமக்களும் சராசரியாக 86,000 டொலர் கடனாளிகளாக உள்ளனர் என சர்வதேச நாணய நிதியம் தகவல் வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில் அதிக கடன் வாங்கும் நாடுகளில் அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் முதல் மூன்று இடங்களில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மொத்த உலக கடனில் சரிபாதி இந்த மூன்று நாடுகளுமே வாங்கிக்குவித்துள்ளன.
சீனாவில் அதிகப்படியான வளர்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்படுவதால் உலக அளவில் அதிக கடனை அந்த நாடு வாங்கிக் குவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2000 ஆம் ஆண்டுக்கு பின் 3 சதவிகிதத்தில் இருந்த சீனாவின் சர்வதேச கடன் அளவு 15 விழுக்காடாக அதிகரித்துள்ளதாகவும் , சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வுகளின்படி உலக கடன் தொகை சராசரியாக 184 டிரில்லியன் டொலர் என தெரியவந்துள்ளது.
இது 2017 ஆம் ஆண்டில் உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 225 விழுக்காடுக்கு நிகராகும்.
மட்டுமின்றி அக்டோபரில் வெளியிட்ட ஆய்வுகளை விட இந்த தொகையானது 2 டிரில்லியன் டொலர் அதிகமாகும் எனவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.