ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளமையானது தமிழக அரசுக்கு மிகப்பெரிய தலைகுனிவாகும். ஆகையால் இனியாவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களை கருத்திற்கொண்டு சிந்தித்து செயலாற்ற வேண்டுமென தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
தி.மு.க நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மு.க.ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“ஸ்டெர்லைட் ஆலையை மூடிய அரசாணையை தமிழக அரசின் கொள்கை முடிவு என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்திருக்கும் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த தீர்ப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அ.தி.மு.க அரசுக்கு மிகப்பெரிய தலைகுனிவாகும்.
அறவழியில் போராடிய 13 பேரின் உயிரைப் பறித்த மத்திய அரசு, இலட்சக்கணக்கான மக்களுக்கு சுகாதாரக்கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதிலும் அலட்சியம் காட்டி இன்று தமிழக அரசை அவமானப்படுத்தியுள்ளது.
ஆனால், ஆலையை மூட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனுப்பிய கடிதத்தை மாத்திரம் ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் ஆலையை மூடி அரசாணை பிறப்பித்தது அதிமுக அரசு.
இதன்போது எதிர்க்கட்சியின் கருத்தினை நிராகரித்ததோடு, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எச்சரிக்கையையும் ஏற்க மறுத்ததோடு ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவே முடியாது எனவும் அ.தி.மு.க. அரசு உறுதியளித்தது.
ஆனால் இன்று தேசிய தீர்ப்பாயத்தின் தீர்ப்பு முதலமைச்சரின் கருத்துக்கு மாறாக தக்க பதிலடியை வழங்கியுள்ளது.
ஆகவே, இனியாவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும் ”என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.