யாழ்.சுன்னாகம் றொட்டியாலடிச் சந்தியில் கடந்த வியாழக்கிழமை(13) இடம்பெற்ற மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 79 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த முதியவர் கடந்த- 13 ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகல் தனது பேரப்பிள்ளையை மல்லாகத்திலுள்ள தனியார் கல்வி நிலையமொன்றில் இறக்கி விட்டுத் தனது வீடு திரும்பிய போது பின்னால் வந்த மோட்டார்ச் சைக்கிள் மோதியதில் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தார். இது தொடர்பான செய்தி சம்பவம் இடம்பெற்ற சில நிமிடங்களிலேயே எமது இணையத்தளத்தில் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த முதியவர் மயக்கமுற்ற நிலையில் வீதியால் சென்றவர்களால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மூன்று தினங்களின் பின் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்.காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் வீதி மருதனார்மடத்தை வசிப்பிடமாகக் கொண்டவருமான ஐயாத்துரை நற்குணநாதன்(வயது-79) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இவர் ஓய்வு நிலை கணக்காளரும், முன்னாள் வலி.வடக்குப் பிரதேச சபை உறுப்பினரும், வலி.வடக்கு இணக்கசபை உறுப்பினரும்,அகில இலங்கை சமாதான நீதவானுமாவார்.
இதேவேளை,சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.