ஐக்கிய தேசிய கட்சியில் சேரும் எண்ணம் தனக்கு எப்போதுமே இல்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சிலர் என்னுடன் நேரடியாக கருத்து கேட்காமல், என்னை அவமானப்படுத்தும் நோக்கிலும், தங்களை பிரபல்யப்படுத்தும் நோக்கிலும் பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர்.
ஜனாதிபதியின் அழைப்பின் பேரில், கிழக்கு தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நல்நோக்கிலேயே, பிரதி அமைச்சைப் பொறுப்பெடுத்தேன். கிழக்கில் தமிழர்கள் இனம் மாற்றம் செய்யப்படுகிறார்கள், நிலவளம் சூறையாடப்படுகிறது அந்த மக்களை காப்பாற்ற வேண்டியது எம் பொறுப்பு.
தற்போதைய சூழலில் நான் பொறுப்பேற்ற பதவியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பதவி இல்லாவிட்டாலும் நான் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஜனாதிபதியுடன் தொடர்ந்து கலந்துரையாடுகிறேன். அதில் எதுவித மாற்றமும் இல்லை.
ஆனால் ஜனாதிபதி இல்லாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சியுடன் சேரப்போகிறேன் என்ற கதை உண்மைக்கு புறம்பானது. ஐக்கிய தேசிய கட்சியில் சேரும் எண்ணம் எனக்கு எப்போதுமே இல்லை.“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியோழேந்திரன் தேசிய அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி பிரதியமைச்சராக பதவி வகித்தார். தற்போது புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பிரதியமைச்சர் பதவி இல்லாமல் போயுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் அவரைப்பற்றிய பல விமர்சனங்கள் எழுந்தவண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.