யாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ். கலட்டி சீனியர் ஒழுங்கையிலுள்ள வீடொன்றின் மீது இத்தாக்குதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது சம்பவத்தில் குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், இத்தாக்குதல் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை எனவும் யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இப்பெற்றோல் குண்டுத் தாக்குதலில் வீட்டின் ஒருபகுதி சிறியளவில் தீக்கிரையாகியுள்ளதாகவும், பல பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இரவு 9 மணியளவில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியதுடன், வீட்டின் கதவினையும் அடித்து உடைத்துள்ளனர்.
இவர்களின் அட்டகாசத்தின் சத்தம் கேட்டு ஓடிவந்த அயல் வீட்டாரின் மீதும் அவர்கள் வாள்வெட்டு நடத்த முற்பட்டுள்ளனர்.
இருப்பினும் அவர் சுதாகரித்து கொண்டு திரும்பி வீட்டுக்குள் அடங்கி கொண்டதால் அவரின் வீட்டு கதவின் மீதி வாள் வெட்டு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கடந்த வாரம் சுன்னாகம் பிரதேசத்திலும் இதே பாணியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், உடற்பயிற்சி நிலையம் ஒன்றும் தீக்கிரையாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.