வவுணதீவு பொலிஸார் படுகொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தனது கணவனை விடுதலைசெய்யக்கோரிய ஐந்து பிள்ளைகளின் தாயினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
கடந்த 30ஆம் திகதி வவுணதீவில் இரண்டு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள அஜந்தன் எனப்படும் சி.இராஜகுமாரனின் மனைவியும் அவரது பிள்ளைகளுமே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்கள் நேற்று (திங்கட்கிழமை) காலை முதல் மட்டக்களப்பு, காந்தி பூங்காவில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதன்போது அஜந்தனின் மனைவி செல்வராணி இராஜகுமாரன் தெரிவித்துள்ளதாவது, “தனது கணவன் கைதுசெய்யப்பட்டு 18 தினங்களை கடந்துள்ள நிலையில் இதுவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தாத நிலையில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் தனது கணவர் எந்தக்குற்றமும் செய்யவில்லையென பொலிஸார் கூறுகின்றனர். ஆனால் அவரை ஏன் தொடர்ந்து தடுத்துவைத்துள்ளார்கள் என்பது தெரியவில்லை.
ஆகையால் உடனடியாக விடுதலை செய்வதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என செல்வராணி வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி டி.ஹகவத்துற போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடாத்தினார். அவர் இதன்போது தெரிவித்ததாவது,
“கைக்குழந்தை உட்பட ஐந்து வயதுக்கும் குறைந்த வயதுடைய குழதைகளை வீதியில் நிறுத்திபோராடுவது குழந்தைகளின் உரிமையினை மீறும் செயல்.
அத்துடன் குழந்தைகளுக்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமானால் அதற்கான பொறுப்பினை தாய் ஏற்றுக்கொள்ளவேண்டும்
மேலும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அவர்கள் எந்த குற்றமும் செய்திருக்காவிட்டால் விடுதலை செய்யப்படுவார்கள்.
ஆகையால் எமது சட்ட நடவடிக்கைகளுக்கு உதவுங்கள்” என டி.ஹகவத்துற கோரிக்கை விடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்தே குறித்த தாய் தனது உண்ணாவிரத போராட்டத்தினை நிறைவுசெய்ததாகவும் நிரபராதியான தனது கணவனை விடுதலைசெய்ய விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடின் வேறு முடிவுகளை எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவேன் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், மாநகரசபை உறுப்பினர் செல்வி மனோகர், சர்வமத ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் அவ்விடத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.