ஏனாம், கோதாவரி, காக்கிநாடா உள்ளிட்டப் பகுதிகளை பெதாய் புயல் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது.
பெதாய் புயல் தாக்கத்தால் புதுச்சேரி
ஒன்றியப் பிரதேசத்திற்கு உட்பட்ட ஏனாம் பகுதி மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த பெதாய் புயல் வலுவிழந்து காக்கிநாடா அருகே கரையைக் கடந்துள்ளது. கோதாவரிக்கும், காக்கிநாடாவிற்கும், ஏனாமிற்கும் அருகே பெதாய் புயல் கரையைக் கடக்க துவங்கியது. புயல் கரையைக் கடக்கத் தொடங்கியபோது ஏனாம் பகுதியிலுள்ள மரங்கள் சாலையில் விழுந்ததோடு, வாகனங்கள் மீதும் விழுந்து சேதம் ஏற்படுத்தியுள்ளன. மின் கம்பங்களும் ஆங்காங்கே சாய்ந்து விழுந்து கிடக்கின்றன. பெதாய் புயலால் ஏனாம், அமலாபுரம், ராஜமுந்திரி, காக்கிநாடா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து பெருமழை பொழிந்து வருவதால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோரத்திலுள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நகரப் பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மக்கள் வெளியே செல்லமுடியாத நிலை நீடிப்பதால் மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் பெருமழை பொழிவதோடு, கிழக்கு கோதாவரியில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. அவசரநிலையின் போது தகவல் தெரிவிப்பதற்காக மொபைல் போன்களை சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளும்படி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவுறுத்தியுள்ளது. புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்