நெடுஞ்சாலை 401இல் மில்ட்டன் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை வேளை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
நெடுங்சாலை 401இன் மேற்கு நோக்கிய வழித்தடத்தில், Trafalgar வீதிக்கருகே நேற்று அதிகாலை 1.30 அளவில் சம்பவித்த அந்த விபத்தில் மோசமான காயங்களுக்கு உள்ளான குறித்த இருவரும் உடனடியாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிற்றூர்தி ஒன்று இணைப்பு பெட்டியுடனான பிறிதொரு வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதாகவும், இதன்போது குறித்த அந்த சிற்றூர்தியினுள் இருந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் வாகனத்தினுள் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் அவர்களை வாகனத்தினுள் இருந்து மீட்டெடுத்த நிலையில், அவர்கள் இருவரும் பாரதூரமான நிலையில் உடனடியாக ஹமில்ட்டன் பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தினை அடுத்து நெடுஞ்சாலை 401இன் மேற்கு நோக்கிய வழித்தடத்தில், Trafalgar வீதிக்கும் James Snow Parkwayக்கும் இடைப்பட்ட பகுதி ஊடான போக்குவரத்துகள் தடைப்பட்டுப் போன நிலையில், பிற்பகல் அளவில் அந்த வீதிகளினூடான போக்குவரத்துக்கள் வழமைக்குத் திரும்பியுள்ளன.