சவுதி அரேபியாவுக்கு இலகுரக கவச வாகனங்களை ஏற்றுமதி செய்யும் ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டால், பில்லியன் கணக்கான டொலர்களை அபராதமாக செலுத்தவேண்டி ஏற்படுமென அமெரிக்க கவச வாகன உற்பத்தி நிறுவனமொன்று எச்சரித்துள்ளது.
ஒன்றாரியோவை மையமாக கொண்டு இயங்கும் அமெரிக்காவின் கிளை நிறுவனமொன்று இதுகுறித்து குறிப்பிடுகையில், இந்த ஒப்பந்தம் நீக்கப்பட்டால் தமது தொழிற்துறையில் பாரிய பின்னடைவு ஏற்படுமென கூறியுள்ளது.
சவுதிக்கு இலகுரக கவச வாகனங்களை ஏற்றுமதி செய்யும் 15 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தத்தை ரத்துசெய்யும் முனைப்பில் கனடா ஈடுபட்டுள்ளது. ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலையின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தத்தை நிறுத்துவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஒன்றாரியோ நிறுவனம் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதோடு, அதிலேயே கனடா பாதிப்பை எதிர்கொள்ளுமென குறிப்பிட்டுள்ளது.
ஒப்பந்தம் நிறுத்தப்பட்டால் பெருமளவான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதோடு, கனேடிய பாதுகாப்பு படைக்கு வாகனங்களை வழங்குவதிலும் சிக்கல் ஏற்படுமென ஒன்றாரியோ வாகன தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலைக்கு பின்னர், சவுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அதன் ஒரு கட்டமாகவே சவுதியுடனான ஒப்பந்தத்தை ரத்துசெய்ய கனடா தீர்மானித்துள்ளது.