40 ஆண்டுகளாக தனி ஆளாக 14 குளங்களை வெட்டிய 82 வயது முதியவருக்கு கர்நாடகா மாநில அரசு உயரிய விருதை அளித்து பெருமை படுத்தியுள்ளது. அந்த விருதின் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு 15வது குளத்தை வெட்ட திட்டமிட்டிருப்பதாக அந்த முதியவர் குறிப்பிட்டுள்ளார். இவரை இணையதளங்களில் பலர் பாராட்டி வருகின்றனர்.
கர்நாடக மாநில அரசு சமீபத்தில் அம்மாநிலத்தை சேர்ந்த காமேகவுடா என்ற 82 வயதான ஒருவருக்கு கர்நாடக ரஜோட்சவா என்ற விருதை வழங்கியது. இந்த விருது அந்த மாநிலத்தில் இரண்டாவது உயரிய விருதாகும். இந்த விருது யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பது அம்மாநிலத்தில் பெரும் விவாதமாக இருக்கும் அந்த வகையில் இந்தாண்டு அந்த விருதை முதியவரான காமேகவுடாக்கு கொடுக்கபட்டது. அப்படி என்ன செய்து விட்டார்? அவருக்கு ஏன் இந்த விருது வழங்கப்பட்டது என பார்க்கலாம் வாருங்கள்.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மாலவல்லி தாலுகா தாசனடூடி கிராமத்தை சேர்ந்தவர் தான் இந்த காமேகவுடா இவர் தனது கிராமத்தில் தனது சொந்த செலவில் இதுவரை 14 குளங்களை வெட்டியுள்ளார். இவருக்கு கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயையும் குளம் வெட்டவே கடந்த 40 ஆண்டுகளாக செலவு செய்து வருகிறார்.
அவருக்காக அறிவிக்கப்பட்டுள்ள விருதின் மூலம் இவருக்கு ரூ 1 லட்சம் பணம் மற்றும் 25 கிராம் தங்கமும் வழங்கப்படும். தற்போது காமேகவுடா இந்த பணத்தைக்கொண்து 15வது குளத்தை வெட்ட திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பெருமைப்பட வைத்த முதியவர்
இது குறித்து காமேகவுடாவுடன் பேசிய போது தான் தற்போது ஏற்கனவே கட்டப்பட்ட 14 குளங்களை விரிவுப்படுத்தும் பணியில் உள்ளதாகவும் அதன் மூலம் விலங்குகள், பறவைகள், என பல உயிரினங்கள் பயன்பெறும் என்றும். தற்போது கிடைத்துள்ள விருதின் மூலம் வரும் பணத்தை அடுத்த குளத்தை வெட்ட பயன்படுத்த போவதாகவும் அறிவித்துள்ளார். அதற்கான பணியை வரும் ஜனவரி மாதம் துவங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
விருதின் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு அடுத்த குளத்தை வெட்ட திட்டமிட்டுள்ளதற்கு அவரின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா என்று கேட்டபோது அவர் இதற்கு முன்பு 14 குளங்கள் வெட்டியபோதும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டே தான் இருந்தனர். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் கடந்த 40 ஆண்டுகளாக இதில் பணியாற்றி வருவதாகவும், 15 குளத்தை வெட்டவும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஆனால் அதையும் அவர் பொருட்படுத்தபோவதில்லை எனவும் கூறினார்.
அவருக்கு கிடைக்கும் பணத்தை எல்லாம் குளம் வெட்ட செலவு செய்வதால் அவரது உறவினர்கள் எல்லாம் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டாதாகவும், ஆனால் தற்போது மரங்கள், குளங்கள் பறவைகள், விலங்குகள் எல்லாம் தனக்கு உறவினராகிவிட்டதாகவும் கூறினார்.
பலர் இவரை பார்த்து கிண்டல் செய்வதாகவும், சிலர் இவர் அரசு நிலத்தை வளைத்துப்போட பார்க்கிறார் என கூறுவதாகவும் கூறிய இவர். இதை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவரது பணியை பார்த்துக்கொண்டே இருப்பதாகவும், கூறினார். இவர் வெட்டிய குளங்களில் எல்லாம் வருடம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
காமேகவுடாவிற்கு படிப்பறிவு எதுவும் இல்லை பள்ளிக்கும் சென்றது இல்லை. ஆனால் அவரிடம் இருப்பது எல்லாம் இயற்கையான அறிவு தான். அதன் மூலம் அவர் கற்றுக்கொண்டது அதிகம். 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே தண்ணீர் பஞ்சம் குறித்து உணர்ந்த காமேகவுடா அன்றே இந்த பணிக்காக தன் ஒட்டு மொத்த வாழ்வையும் அர்பணித்து விட்டார்.
40 ஆண்டுகளாக இவர் வெட்டிய குளங்கள் தான் இன்று அப்பகுதியின் நீலத்தடி நீர்மட்டத்தை நல்ல நிலையில் வைத்துள்ளது. இவரது குளங்களில் மூலம் அந்த பகுதி மக்கள் அதிக பலன்களை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இது போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களை பார்ப்பது மிக சிரமமான விஷயம் தான்.
இவரிடம் பேசும் போது தான் இந்த பூமியில் வாழும் இறுதிநாள் வரை இந்த பணியை தொடர விரும்புவதாகவும் அதுவரை கடவுள் தனக்கு ஆரோக்கியமான வாழ்வை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இவரை தற்போது இணையதளங்களில் பலர் பாராட்டியுள்ளனர்.