நடப்பு சந்தைப் பருவத்தில் இதுவரையிலான காலத்தில் இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 2.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இந்திய சர்க்கரை ஆலைகளின் உற்பத்தி விவரங்களைச் சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் மாதம் தொடங்கிய நடப்பு சர்க்கரை பருவத்தில் (டிசம்பர் 15 வரை) மொத்தம் 7.05 மில்லியன் டன் அளவிலான சர்க்கரையை ஆலைகள் உற்பத்தி செய்துள்ளன. இது சென்ற ஆண்டின் இதே காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 6.9 மில்லியன் டன் சர்க்கரையை விட 2.1 சதவிகிதம் கூடுதலாகும். உலகின் இரண்டாவது மிகப் பெரிய சர்க்கரை உற்பத்தியாளராக உள்ள இந்தியா, இந்த ஆண்டில் (2019 செப்டம்பர் வரை) மொத்தம் 31.5 மில்லியன் டன் அளவிலான சர்க்கரையை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டின் உற்பத்தி அளவு 26 மில்லியன் டன்னாக இருந்தது.
டிசம்பர் 15 நிலவரப்படி, மொத்தம் 462 ஆலைகள் கரும்பு பிழியும் பணியில் ஈடுபட்டு, மொத்தம் 7.05 மில்லியன் டன் சர்க்கரையை உற்பத்தி செய்துள்ளன. சர்க்கரை உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் 2.9 மில்லியன் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில் இதன் உற்பத்தி அளவு 2.57 மில்லியன் டன்னாக மட்டுமே இருந்தது. இம்மாநிலத்தில் மொத்தம் 176 ஆலைகள் கரும்பு பிழியும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதர மாநிலங்களான உத்தரப் பிரதேசத்தில் 1.89 மில்லியன் டன்னும், கர்நாடகாவில் 1.39 மில்லியன் டன்னும், குஜராத்தில் 3,10,000 டன்னும், ஆந்திரப் பிரதேசத்தில் 1,05,00 டன்னும், தமிழகத்தில் 85,000 டன்னும் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.