சட்டவிரோதமான முறையில் பெரும் எண்ணிக்கையான பனைகள் மற்றும் வடலிகளை அழித்த குற்றச்சாட்டில் சாவகச்சேரிப் பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளனர்.
யாழ்.நாவற்குழி பின் முருங்கை வீதிக் கடற்கரையோரத்தில் பத்து ஏக்கர் நிலப் பனந்தோப்பில் காணப்பட்ட பனைகள் இரண்டு கனரக வாகனங்கள் மூலம் அழிக்கப்பட்டன. 500 முதல் 600 வரையான பனைகள்,வடலிகள் என்பனவே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கமைய சம்பவ இடத்திற்குச் சென்ற பனை அபிவிருத்திச் சபை உத்தியோகத்தர்கள் பனை அழிப்பைத் தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து சாவகச்சேரிப் பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் அறிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் பனை அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இருவரைக் கைது செய்தனர். கைதான சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.