உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளில் ஒன்று உணவு.நாம் உள்ளெடுக்கும் உணவு பூரணமானதும், இலகுவில் கிடைக்கக்கூடியதும், எம்வாழ்க்கைச் செலவிற்குள் அடங்கக்கூடியதாகவும் அமைய வேண்டும். உண்ணும் உணவினுள் பல கூறுகள் அடங்குகின்றன.
அவையாவன, காபோவைதரேற்று, புரதம், கொழுப்பு, விற்றமின், கனியுப்பு, நீர் என்பனவாகும். தாவரங்களில் இருந்து பெறப்படும் (காபோவைதரேற்உணவுக்கூறின்) ஒரு பிரிவானது நாருணவு எனப்படும். இது சமிபாட்டுத்தொகுதியினுள் சமிபாடு அடையாது. ஆனால் உடலிற்கு பல நன்மைகளைச் செய்கின்றது. விசேடமாக சமிபாட்டுத் தொகுதியை ஆரோக்கியமாக பேண உதவும்.பொதுவாக இவ்வுணவு மரக்கறிகள், இலைவகைகள், பழங்கள், தானியங்கள், அவரை வகைகளில் அதிகளவு நிறைந்துள்ளது.
இவற்றில் மூன்று வகையுண்டு.
01.கரையும் நாருணவு – இது பழங்கள், மரக்கறிகள், தானியங்கள்,அவரை வகைகளில் காணப்படுகின்றது.இது இரைப்பை வெறுமையாக்கப்படும் நிகழ்வை தாமதப்படுத்தும். இதனால் இரைப்பை நிரம்பியது போன்ற உணர்வு ஏற்படும். அத்துடன் குருதியில் குளுக்கோஸ் மட்டத்தை சீராக பேணவும், கொலஸ்ரோல் அளவை குறைக்கவும் உதவுகின்றது.
02.கரையா நாருணவு – இது மரக்கறிகள்,முழுமையான தானியங்கள், வித்துக்கள், பழங்களின் தோல்களில் காணப்படுகின்றது. இது நீரை அகத்துறிஞ்சி உணவை மென்மையாக்கி குடலின் ஒழுங்கான அசைவிற்கு உதவுகின்றது. அத்துடன் நிரம்பிய உணர்வையும் குடலின் ஆரோக்கியத்தையும் பேண உதவுகின்றது.
03.சமிபாடடையா நாருணவு இது அரிசி, உருளைக்கிழங்கு, வாழைப்பழம் போன்றவற்றில் காணப்படுகின்றது. இது சமிபாடடையாது குடலினுள் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பக்றீரியாக்கள் வாழ்வதற்கு ஊடகமாக அமைந்து குடலின் ஆரோக்கியத்தைப் பேண உதவி புரிகிறது. அன்றாட உணவில் நாருணவை நாம் உட்கொள்வது அவசியம் ஏனெனில்,
உடல் நிறையைக் குறைக்கலாம்.நாருணவை அதிகளவு உட்கொள்வதால் கலோரிகூடிய உணவின் உள்ளெடுக்கும் அளவு குறைக்கப்படும். பசியற்ற உணர்வும் இரைப்பை நிரம்பியதுமான உணர்வும் ஏற்படும். இதற்கு உணவில் அதிகளவு மரக்கறிகள்,பழங்கள் தானியங்களை சேர்த்தால் இப்பயனைப் பெறலாம்.
சலரோகம் வராமலிருக்க முற்பாதுகாப்பாகக் கொள்ளலாம்.அல்லது சலரோகத்தைக்கட்டுப்பாட்டில் வைக்கலாம். அதாவது குருதியிலுள்ள குளுக்கோஸ் மட்டத்தை சீராகப் பேண இவ் நாருணவு உதவுகின்றது.
உடல் நிறையை சீராகப் பேண உதவுகின்றது. நாருணவானது கொழுப்பு உடலில் படிவதற்கான நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்துவதனால் உடல் நிறையை எப்போதும் சமனாகவே பேண உதவும்.
பக்றீரியாக்களில் சில வகை எமக்கு உதவி செய்கின்றது. இவ்வகையான உதவும் பக்றீரியாக்கள் எம் குடலினுள் வாழ்வதற்கு சிறந்த ஊடகமாக நாருணவு அமைகின்றது.
குடலில் புற்றுநோய் ஏற்படும் சந்தர்ப்பத்தைக் குறைக்கின்றது.குடலின் அசைவைபேணுவதற்கு உதவுகின்றது.
குடலிலுள்ள உணவினால் ஏற்படும் உடலுக்கு வேண்டாத நச்சுப்பொருட்களை அகற்ற உதவுகின்றது.
என்பின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது.அதாவது இந்த நாருணவிலுள்ள கல்சியக்கூறு இதற்கு பயன்படுகிறது.
மலச்சிக்கலைத் தடுக்கின்றது. நாருணவானது உணவு சமிபாடடைந்து இறுதிவிளைவாக வரும் பயனற்ற உணவுக் கூறுகளை மென்மையாகவும் தொகையாகவும் தோற்றமடையச் செய்வதால் மலம் கழிப்பதற்கு இலகுவாக இருக்கும்.
வாழ்நாள் அதிகம். நோய்களில் இருந்து விலகி இருக்கும் தகவு அதிகமானவர்கள் தம் உணவில் அதிகளவு நாருணவு உண்பவர்களே என்று ஆராய்ச்சிகளும் கூறுகின்றது.
நாருணவானது கொலஸ்ரோல் எனும் கொழுப்புஉணவிலிருந்து பிரித்துக்கிடைக்கப்பெறும் பதார்த்தம் குருதியில் சேர்வதை குறைக்கும்.ஆற்றல் கொண்டது. இதனால் இருதயநோய்கள் ஏற்படும் வாய்ப்பும்குறைக்கப்படும்.
எம் சூழலில் கிடைக்கும் தானியங்கள், பழங்கள், கீரைவகைகள், மரக்கறிகள் எண் ணில் அடங்காதவை.இவை அனைத்தும் எமக்கு இயற்கை அளித்துள்ள வரங்கள். எம்பிரதேச காலநிலை, மண்வளம், நீர்வளம் அளப்பரியது. எம் வாழ்க்கையை இயற்கையுடன் சேர்ந்து வாழ்ந்து எம் உணவுப்பழக்கத்தில் நாருணவை அதிகளவு சேர்த்தால் அநேகமான தொற்றா நோய்களிலிருந்துவிலகியே வாழலாம் என்பது உறுதியே. மரக்கறி உணவே மனிதர்களை மருந்து உட் கொள்ளாது வாழ வழியமைகின்றது. மரக்கறி உணவை அதிகளவு உண்போம்.நோயற்று வாழ்வோம்.