யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கடும் மழை பெய்து வருகிறது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் யாழ்.குடாநாட்டில் மழைவீழ்ச்சி குறைவாக காணப்படுவதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின் புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த பல நாட்களாக யாழில் மழைவீழ்ச்சியும் வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக பெரும் போக விவசாயச் செய்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மழையின்றி பெரும் பாதிப்பினை எதிர்கொண்டு வந்தார்கள்.
இந்நிலையில் இன்றைய தினம் அதிகாலை,காலை வேளைகளில் யாழின் பல்வேறு பகுதிகளிலும் மழை பொழிந்துள்ளது. இன்று பிற்பகல்-05 மணி முதல் யாழில் பரவலாக கடும் மழை பெய்து வருகிறது.
மழையுடனான காலநிலையின் போது சில பகுதிகளில் காற்றின் வேகமும் அதிகரித்துக் காணப்படுகிறது.
கடும் மழை காரணமாக வீதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழை வெள்ளநீர் காணப்படுகின்றது.
இதேவேளை, வங்களா விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக வடக்கு,கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று நாளை அதிகரித்த மழைவீழ்ச்சி காணப்படுமென இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.