2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிதாக இணைந்துள்ள யுவராஜ் சிங்,மும்பையில் தனது பழைய நினைவுகள் குறித்து மனம் திறந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக வலம்வந்த யுவராஜ் சிங், சமீபகாலமாக ஃபார்ம் இன்றித் தவித்து வருகிறார். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. அந்த ஏலத்தின் முதல் சுற்று முடிவு வரை எந்தவோர் அணியும் யுவராஜை விலைக்கு வாங்க முன்வரவில்லை. பின்னர் இரண்டாவது சுற்றில் ஒருவழியாக மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.1 கோடி கொடுத்து அவரைச் சொந்தமாக்கியது. தற்போது யுவராஜ் சிங்கை மும்பை அணிக்கு வரவேற்கும் விதமாக அந்த அணி, யுவராஜுக்கும் மும்பைக்கும் இடையிலான நினைவுகள் குறித்த வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதில் 2011ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டி, சச்சின் டெண்டுல்கர், ஜாகிர் கான், யுவராஜ் ஆகியோருக்கு இடையிலான நட்புறவு குறித்து காட்சிப்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் பேசிய யுவராஜ் “நான் 10 ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்திருக்கிறேன். என்னை வரவேற்கும், என்னை விரும்பும் அணிக்குத் திரும்புவதை விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
மும்பையின் புகழ்பெற்ற வான்கடே மைதானம் குறித்துப் பேசிய யுவராஜ், “உலகக் கோப்பை வெற்றிக் கனவு வான்கடே மைதானத்தில் நனவானது. எங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அது உணர்வுப்பூர்வமானதாகும். சச்சினுக்காக அந்தக் கோப்பையை வெல்ல கடுமையாகப் போராடினோம். தற்போது மீண்டும் மும்பை ரசிகர்களுக்கு மத்தியில் களமிறங்கப்போவதை எண்ணி ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “எனது கிரிக்கெட் வாழ்வின் பெரும்பாலான பகுதியை சச்சின் மற்றும் ஜாகிருடன் கழித்துள்ளேன். எங்களுக்கு இடையில் நல்ல நட்புறவு இருக்கிறது. எனவே, கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்து நாங்கள் எங்களால் முடிந்த பங்களிப்பை அணிக்கு வழங்க தயாராக உள்ளோம்” என்று கூறியுள்ளார்.