“வரும் மக்களவைத் தேர்தலில் அமமுக தனித்துப் போட்டியிடும்” என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் நேற்றிரவு (டிசம்பர் 22) செய்தியாளர்களை சந்தித்த தினகரனிடம், மெகா கூட்டணியில் அமமுக இணைவதற்கான வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, “மெகா கூட்டணியில் இருக்கும் ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவித்து காங்கிரஸுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டார். தமிழக மக்களின் நலனுக்காக 2014 மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா தனித்துப் போட்டியிட்டார். அவருடைய வழியிலேயே தொண்டர்களாகிய நாங்கள் போட்டியிடுவோம். தேர்தல் முடிவில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்பது நமக்குத் தெரியும். எனவே பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் சக்தியாக அமமுகவை தமிழக மக்கள் தேர்ந்தெடுப்பர்” என்று தெரிவித்தார்.
மேலும், “ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சை உறுப்பினரான நான் வெற்றிபெற்றதால், ஜெயலலிதா இருந்தபோது அறிவித்த திட்டங்களைக் கூட அங்கு நிறைவேற்றாமல் வைத்துள்ளனர். அடிப்படை வசதிகள் செய்வதைக் கூட இந்த அரசாங்கம் தடுத்துவைத்துள்ளது” என்றும் குற்றம் சாட்டினார்.
மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம் என்று சமீப காலமாக தினகரன் கூறிவந்தார். திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியே வந்தால் அவர்களுடன் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றும் கூறியிருந்தார். இதற்கிடையே மக்கள் நீதி மய்யம் நடத்திய காவிரி ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி, தினகரன் ஆதரவாளர் தங்க.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிலையில், மூன்று கட்சிகளும் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்கப் போவதாகவும் தகவல் வெளியானது.
தற்போது திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், தினகரனால் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைக்கமாட்டோம் என்று தினகரன் உறுதியாகக் கூறிவிட்டார். திமுகவுடன் தோழமையிலுள்ள கட்சிகளைத் தவிர, மீதமுள்ள பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் முடிவுக்கு தினகரன் தள்ளப்பட்டுள்ளார். அப்படி கூட்டணி அமைந்தால் அதற்கு தலைமையேற்பது யார் என்ற குழப்பமும் அக்கட்சிகளுக்குள் நிலவும். இதனையெல்லாம் மனதில் வைத்தே தனித்துப் போட்டியிடுவோம் என்று தினகரன் அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.