ஜெயம் ரவி, ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ள அடங்கமறு திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேலு இயக்கியுள்ளார். ஹோம் மேவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஒரு இளம் பெண்ணின் மரணம், கொலையா தற்கொலையா என்பதை விசாரிக்கிறார் உதவி ஆய்வாளர் சுபாஷ் (ஜெயம் ரவி). அதன்பின்னால் அதிகாரம், பணபலம் படைத்தவர்களின் மகன்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டது தெரியவருகிறது. உயர் அதிகாரிகள் அந்த வழக்கை கைவிடச் சொல்லியும் விடாமல் அவர்களைக் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்கிறார். ஆனால் ஆதாரங்கள் அழிந்துவிடுவதாலும் உயர் அதிகாரிகளின் நெருக்கடிகளாலும் உடனே வெளியே வருகின்றனர். அதற்குப் பழிவாங்கும் விதமாக ஜெயம் ரவி சஸ்பெண்ட் செய்யப்படுவதுடன் அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, அவர்களது ஒரு குழந்தை என ஒட்டுமொத்த குடும்பமும் பலியாகிறது. ஒரே நேரத்தில் எல்லோரையும் இழந்த அவர் அதற்கு காரணமானவர்களை பழிவாங்கும் கதை தான் அடங்க மறு.
டாஸ்மாக் போராட்டம், அமைச்சரின் மகனை துரத்திச் சென்று அடிப்பது, கதாநாயகி அறிமுகத்திலிருந்து குடும்பத்தின் சூழலை மறுமுறை விளக்கும் ஒரு பாடல் எனப் படம் கதைக்குள் போக அதிக நேரம் எடுக்கிறது. வழக்கம் போல தமிழ் சினிமா கதாநாயகியைப் போல வந்து செல்கிறார் ராஷி கண்ணா. அவருக்கான முக்கியத்துவம் திரைக்கதையில் எங்கும் இல்லை.
உயர் அதிகாரிகளாய் வரும் மைம் கோபி, சம்பத் குற்றமிழைத்த இளைஞர்கள் மற்றும் அவர்களது தந்தைகள் அனைவரும் தமிழ் சினிமாவில் பார்த்து புளித்துப் போன கதாபாத்திர வார்ப்புகள். பணக்காரர்களின் பக்கம் நின்று அத்தனை தவறுகளுக்கும் உதவி செய்யும் சம்பத் தனது மகள் ஒரு வார்த்தை சொன்னதும் மனம் மாறுவது ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை.
பணம், அதிகாரம், செல்வாக்கு மிக்க பெரும் கூட்டத்தைத் தனி ஒருவனாய் எதிர்த்துப் பழிவாங்குகிறார் ஜெயம் ரவி. ஆனால் அவற்றின் பெரும்பகுதி எப்படி சாத்தியமானது என்பதைக் காட்டவே இல்லை. இன்னும் அஞ்சு செகண்டுல அந்த கலெக்டர் இங்க வருவான் என்று ஜெயம் ரவி கூற அடுத்தடுத்து அவர் சொல்லியது போல் எல்லாம் நடக்கிறது. கமிஷ்னர் அலுவலகத்தின் முன்பே கலெக்டரின் மகன் இறக்க, அங்கிருந்து ஸ்லோ மோஷனில் ஜெயம் ரவி பைக்கில் செல்கிறார். இதை எப்படி நடத்தினார் என்பது தெரியாது. அவர் கதாநாயகன் என்பதால் இது சாத்தியமானதாக இயக்குநர் சொல்கிறாரோ என்னவோ. இது போல் ஒவ்வொருவராய் கடத்தப்படுவதும் ஜெயம் ரவி எளிதாகத் தப்பிப்பதும் நம்பும்படியாக இல்லை.
அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றங்கள் செய்வதும், அதன் மூலம் பழிவாங்குவதுமான கதைகள், காட்சிகள் சமீபகாலங்களில் தமிழ் சினிமாவில் அதிகளவில் வெளிவருகின்றன. அப்படியான தோற்றத்தை கிளைமேக்ஸ் காட்சியிலும் சில காட்சிகளிலும் உருவாக்கியுள்ளனர். பின்னணி இசை தொடக்கம் முதலே இரைச்சலாய் ஒலிக்கிறது.
மொத்தத்தில் வழக்கமான பழிவாங்கல் கதையில் சில பில்டப்புகளை சேர்த்து வித்தியாசமாகக் காட்ட முயற்சித்திருந்தாலும் அது பலனளிக்கவில்லை.