வட மாகாணத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வந்த இயற்கையின் சீற்றம் தணிந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்தப் பகுதியில் மழையுடன் கூடிய காலநிலையில் இன்று முதல் மாற்றம் ஏற்படும் என்று திணைக்களம் இன்று அதிகாலையில் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆனாலும் வட மாகாணத்தில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை 2 மணியளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வட மேல் மாகாணத்திலும் மாத்தறை மாவட்டத்திலும் மழை பெய்ய கூடும். சில நேரங்களில் அந்த மழை 75 மில்லி மீற்றர் வரை அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் பிரதேசங்களில் தற்காலிகமாக காற்று வீசக்கூடும் எனவும் மின்னலினால் ஏற்படுகின்ற விபத்துக்களை குறைத்து கொள்வதற்கு அவசியமான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த சில நாட்களாக வெள்ளத்தின் மூழ்கிய பகுதிகளில், தற்போது வளம் வடிந்தோடுவதாக இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதையடுத்து, வான் கதவுகள் மூடப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக வடமாகாணத்தில் முழுமையாக இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.