இஸ்ரேல் நாடாளுமன்றத்தை கலைத்து முன்கூட்டிய தேர்தலை நடத்துவதற்கு, பிரதமர் பென்சமின் நெதன்யாஹு தீர்மானித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாத ஆரம்பத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சி அங்கத்தவர்களுடன் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சந்திப்பை தொடர்ந்து பிரதமர் நெதன்யாஹு இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
தீவிர கட்டுப்பாடுடைய யூதர்களை இராணுவத்தில் இணைப்பதை இலக்காக கொண்ட சர்ச்சைக்குரிய சட்டத்தை இயற்றுவதற்கு தேவையான ஆதரவை பெறுவதில் ஆளும் கட்சி தோல்வியடைந்த நிலையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
120 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 61 ஆசனங்களுடன் பெரும்பான்மையை நிரூபித்து நெதன்யாஹு நான்காவது முறையாக பிரதமராக சேவையாற்றி வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த பிரதமர் தன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படின் பதவி விலகுவது தொடர்பாக எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை.
கடந்த 1996 முதல் 1999ஆம் ஆண்டுவரை பிரதமராக பதவி வகித்த நெதன்யாஹு, மீண்டும் 2009ஆம் ஆண்டு பதவி வகித்ததுடன், தற்போதைய அரசாங்கம் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அதிகாரத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.