பல ஆபாச இணையதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், ஆபாசத்தின் அரங்கமாக சென்சார் ஏதும் இல்லாமல் சத்தமில்லாமல் மாறிக் கொண்டிருக்கிறது டிக் ரொக் எனும் மொபைல் செயலி.
15 நொடிகள் இதில் என்னவேண்டுமானாலும் நடிக்கலாம் பேசலாம் பாடலாம் ஆடலாம். ஆனால், இந்த 15 நொடிகளில் அரங்கேற்றப்படும் ஆபாசங்கள் எல்லையில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
டிக் ரொக் அப் இந்த ஆண்டின் முதல் பாதியில் அப்பிள் அப் ஸ்டோரில் இருந்து மிக அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட அப் என சென்ஸார் டவர் என்ற நிறுவனம் வெளியிட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பேஸ்புக், இன்ஸ்டகிராம், ஸ்நாப்சேட் அப்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி இந்த அப்ளிகேஷன் முதலிடத்தில் உள்ளது.
சீனாவின் ByteDance என்ற நிறுவனத்துக்குச் சொந்தமானது இந்த அப்ளிகேஷன். இந்த அப்ளிகேஷன் குறுகிய நேரத்தில் ஒரு தனிநபர் தனது தனித்திறமையை வெளிப்படுத்தும் மேடையாக இருக்கிறது என்று இதனை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், விமர்சகர்கள் முன்வைக்கும் கருத்தையும் புறந்தள்ளிவிட முடியாது. இளம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த அப்ளிகேஷன் சில மோசமான விமர்சனங்களுக்கு அவர்களை உள்ளாக்குகிறது. அதேபோல் சக வயதினர் மத்தியில் கேலிப் பொருளாகவும் ஆக்குகிறது. அதுமட்டுமல்லாமல் பாலியல் ரீதியாக பெண்களைச் சூறையாட நினைப்பவர்களுக்கு விருந்தாக்கிவிடுகிறது என்பதே அந்த புறந்தள்ள முடியாத விமர்சனம்.
இந்த அப் முன்வைக்கும் சுதந்திரக் கோட்பாடு, “raw, real and without boundaries” அதாவது கட்டுப்பாடுகள் கிடையாது என்பதே. 12 வயது முதலான குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் இதைப் பயன்படுத்தலாம் எனக் கூறுகிறது.
இந்த அப்ளிகேஷன் நமது சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. காரணம் இளம் பெண்கள் ஆபாசம் பொதிந்த பாடல் வரிகளை சர்வ சாதாரணமாக பாடி மகிழ்கின்றனர். இவற்றில் பெரும்பாலும் பெண்ணின் மாண்பைச் சீர்குலைப்பதாக இருந்தாலும்கூட அதைப் பற்றி எவ்வித நெருடலும் இல்லாமல் பாடுகின்றனர்.
டிக் ரொக்கில் பாடியே பிரபலமானவர்களும் இருக்கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த 13 வயது ஹாலியா பீமர் இப்படி டிக் ரொக்கில் பாடியே பிரபலமானார். இவருக்கு 5 மில்லியன் ஃபாலோயர்கள் டிக் ரொக் வலைப்பக்கத்தில் உள்ளனர்.
கடந்த ஆண்டு, இந்தோனேசிய அரசாங்கம் இந்த அப்ளிகேஷனைத் தடை செய்தது. அந்நாட்டில் 1,70,000 பேர் ரொக் அப்ளிகேஷனைப் பதிவிறக்கம் செய்த நிலையில் அது குழந்தைகளுக்கு உகந்ததாக இல்லை எனக் கூறி இந்தோனேசிய அரசு இந்த அப்ளிகேஷனைத் தடை செய்தது. பின்னர் சீனாவில் இருந்து ரொக் பிரதிநிதிகள் ஜகார்தாவுக்கு விரைந்தனர். ரொக் செயலியில் இருந்து ஆபாச கென்டன்ட்டை நீக்குவதாக உறுதியளித்த பின்னரே இந்தோனேசியா தடையை நீக்கியது.
அமெரிக்காவின் இணைய கண்காணிப்புத் தளமான கொமன் சென்ஸ் (Common Sense) ரொக் செயலியில் உள்ள வயது வந்தோருக்கான கென்டென்ட்டும் தனிநபர் சுதந்திரம் அத்துமீறப்படுவதற்கான அபாயமும் கண்காணிக்கப்பட வேண்டியது என்கிறது. எனவே, 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ரொக்கில் செயல்பட அனுமதி அளிக்கக்கூடாது என பரிந்துரைக்கிறது.
ஆனால், வயது வரம்பைக் குறைப்பது ரொக்கின் அசுர வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் என்பதால் ரொக் நிறுவனம் இதில் தயக்கம் காட்டக்கூடும் எனத் தெரிகிறது.
பிரான்ஸ் நாட்டில், 11 வயது முதல் 14 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 38% பேர் ரொக்க்கில் கணக்கு வைத்துள்ளதாக அந்நாட்டின் இணையப் பயன்பாடு கண்காணிப்பு அமைப்பு ஜெனரேஷன் நியூமரிக் கூறுகிறது. அதேபோல் 58% பெண் பிள்ளைகள் ரொக்கில் கணக்கு வைத்துள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
இதனால், கடந்த மாதம் பிரான்ஸ் நாட்டு பொலிஸார் பெற்றோருக்கு எச்சரிக்கை செய்துள்ளனர். ரொக் செயலியால் உங்களது பிள்ளைகள் பாலியல் ரீதியான தொல்லைகளில் சிக்கலாம் என எச்சரித்துள்ளனர்.
இது மாதிரியாக குழந்தைகள் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகும் சூழல் என்பது பெற்றோர், கல்வியாளர்கள், மருத்துவர்களுக்கு புதியதொரு சவால். சமூக வலைதளங்களுக்கு அடிமையாகும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை எப்படி மீட்டெடுப்பது என்பதில் இன்னும் தெளிவான வரைமுறைகளை நிபுணர்களே வகுக்க முடியாத சூழலே நிலவுகிறது. புதிய தொழில்நுட்பங்கள் இளம் தலைமுறையினருக்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கின்றன.
ஒரு தந்தையின் முடிவு:
வில்லியம் சோலே என்ற நபர் தனது 12 வயது மகள் ரொக் செயலியில் விறுவிறுப்பாக செயல்படுவதைக் கண்டிருக்கிறார். அந்தச் சிறுமிக்கு நடனம் மீது ஆர்வம் அதிகம். அதனால், தனது நடனத் திறமையை அதில் தாராளமாகக் காட்டி வந்துள்ளார். இந்நிலையில், சோலே தனது மகளுடன் பேசி ரொக் செயலியை போனில் இருந்து நீக்கியிருக்கிறார். ஆரம்பத்தில் மகள் கண்ணீர் சிந்தினாலும்கூட தனது சமூக அடையாளம் நொறுக்கப்பட்டதாக உணர்ந்தாலும்கூட பின்னர் தந்தையின் அறிவுரையை அவர் புரிந்து கொண்டிருக்கிறார். எனவே தீர்வு என்பது எப்போதுமே பெற்றோரிடமிருந்துதான் வர வேண்டும்.