வடமாகாணத்தின் முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கள் இயற்கையின் பெரும் சீற்றங்களுக்குள்ளாகி அங்கு வாழும் மக்களின் இயல்புநிலையை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
மக்களின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி மக்களின் இயல்புநிலை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது மாத்திரமில்லாது பல்வேறு நெருக்கடியான அவதி நிலைக்கு அம் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு தேவையறிந்து மனிதநேயத்துடன் கரம் நீட்டியுள்ளது முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனம்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட மா.சசிக்குமார் தலைமையிலான முனைப்பு நிறுவனத்தார் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்துடன் இணைந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருள் உதவிகளை வழங்கியுள்ளனர்.
மேலும், இந்த மனிதநேய பணியில் முல்லைத்தீவு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் திருமதி கு.சறோஜா, முனைப்பு நிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன், பொருளாளர் அ.தயானந்தரவி நிருவாக சபை உறுப்பினர்கள் த.பிரபாகரன், துசாந்தன், ஆர்.திலக்சன் ஆகியோருடன் தேசிய சம்மேளன பிரதிநிதி ச.ஜனகன், முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிட்டத்தக்கது.