சபாநாயகர் கருஜயசூரிய, சுமந்திரனுடைய ஆலோசனைகளுக்கு கட்டுப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற ஜனநாயகம் மக்கள் ஆணை பற்றி பேசும் சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றத்தினுள் ஐக்கிய தேசிய கட்சியை வழிநடத்தும் சுமந்திரனுடைய ஆலோசனைகளுக்கு கட்டுப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரனவீர இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு 54 உறுப்பினர்களைக் கொண்டிருந்த போதும், தற்போது நூறு உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்ற போதும் எமக்கு எதிர் கட்சி அந்தஸ்தை வழங்காது, வெறும் 14 உறுப்பினர்கள் மாத்திரமே மீதமுள்ள கூட்டமைப்பிற்கு தொடர்ந்தும் எதிர்கட்சி அந்தஸ்தை சபாநாயகர் வழங்கியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றதிலிருந்து பாதாள உலகக் குழு மற்றும் மனிதப்படுகொலைகள் அதிகரித்துள்ளன. அன்று ஜே.ஆர்.ஜயவர்தன கூறியதைப் போன்று தற்போது நாட்டில் மக்கள் அனைவரும் தத்தமது பாதுகாப்பை தாமே உறுதி செய்துகொள்ள வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது என்றார்