இனிமேல் தேர்தல்களில் போட்டியிடும் எண்ணமில்லை. அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுபெற்றுவிட்டேன் என வடமாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.
நேற்று இதனை தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஈ.பி.டி.பி தலைமையகத்தில் நேற்று டக்ளஸ் தேவானந்தா செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருந்தார். இதில்- சி.தவராசாவை வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க ஈ.பி.டி.பி திட்டமிடுகிறதா என செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த டக்ளஸ் தேவானந்தா- “வடமாகாணசபை தேர்தலில் அவரை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குவதில் எந்த பிரச்சனையுமில்லை. அது பற்றி கலந்துரையாடி வருகிறோம். உரிய நேரத்தில் தீர்மானம் எடுப்போம்“ என்றார்.
இந்த சந்திப்பு முடிந்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் சி.தவராசா தனிப்பட்டரீதியில் பேசிக்கொண்டிருந்த போது, அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டதாக தெரிவித்தார்.
“நான் அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கிவிட்டேன். இனி தேர்தல்களில் போட்டியிடும் எண்ணம் எனக்கில்லை. வடமாகாணசபையின் பதவிக்காலத்தில் மக்களிற்கு உருப்படியாக அவர்கள் எதையும் செய்யவில்லை. அடுத்த தேர்தலில் தெரிவாகும் 38 உறுப்பினர்களாலும் மக்களிற்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை.
அது மட்டுமல்ல, இனிவரும் காலங்களில், கடந்த மாகாணசபையை விட மோசமானவர்களே சபையில் இருக்க சந்தர்ப்பம் உள்ளது. இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால், அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்டு தெரிவானவர்களையும், அவர்களின் செயற்பாடுகளையும் பார்க்கும்போது அப்படித்தான் தெரிகிறது.
நான் அரசியலில் இருந்து விடுபட்டு விட்டேன். எனது கட்சிப்பணிகளையும் கைவிட்டு விட்டேன். தற்போது சாதாரண ஒரு சேவகனாக மட்டுமே செயற்பட்டு வருகிறேன்“என்றார்.