அன்னாசியில் பல வகை ஊட்டச்சத்துகள் உள்ளதை பலரும் அறிவதில்லை. அன்னாசி பழச்சாறை அருந்துவதால் நல்ல உடல் வளர்ச்சியும், முன்னேற்றமும் காணப்படும்.
அன்னாசிப் பழத்தின் சாறு மிகுந்த சுவையுடன் இருக்கும். இயற்கையாகவே இதில் சர்க்கரை அதிகமாக இருக்கும். இதனால் அனைவரும் இந்த பழச்சாற்றை பெரிதும் விரும்புவர். ஆனால் இதில் பல வகை ஊட்டச்சத்துகள் உள்ளதை பலரும் அறிவதில்லை. இந்த பழச்சாறில் ப்ரோமெலைன் என்ற என்சைம் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவும் முக்கியமான என்சைம் ஆகும். மேலும் பொட்டாசியம், பி வைட்டமின்கள், மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்து உள்ளது. உயர் ரத்த அழுத்தம், குறைந்த வளர்சிதை மாற்றம், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, கருவுறுதலில் பிரச்சினைகள், வீக்கங்கள், புற்றுநோய் அபாயம், மலச்சிக்கல், மனச்சோர்வு, பதற்றம் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் அன்னாசி பழச்சாறை தொடர்ந்து அருந்தலாம்.
பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், உயர் ரத்த அழுத்தத்திற்கு இது ஒரு சிறந்த மருந்தாக இருப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். இது ஒரு சிறந்த குழல் விரிப்பி. அதனால் ஹைப்பர் டென்ஷன் குறைகிறது. இதனால் இதய நலன் முற்றிலுமாக பாதுகாக்கப்படுகிறது. இதன் மூலம் மாரடைப்பு, வாதம் போன்றவற்றின் அபாயங்கள் குறைகிறது.
இந்த பழச்சாறில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. கடைகளில் கிடைக்கும் அன்னாசி பழச்சாறில் அஸ்கார்பிக் அமிலம் சேர்க்கப்படுகிறது. இதன் மூலம் வைட்டமின் சி ஊட்டச்சத்து இன்னும் அதிகரிக்கிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்கப்படுத்தி வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதுவே உடலை காக்கும் அரணாக இருக்கிறது.
வைட்டமின் பி அன்னாசி சாறில் அதிகமாக உள்ளது. இது மன நிலையை மேம்படுத்தி, ஹார்மோன் வளர்ச்சியை சீராக்குகிறது. இதனை அருந்துவதால் பதற்றம் தணிக்கப்படுகிறது. கீல் வாதத்தின் அறிகுறிகளை களைகிறது. அன்னாசியில் உள்ள நார்ச்சத்து மற்றும் ப்ரோமெலைன் போன்றவை குடல் இயக்கத்தை அதிகப்படுத்தி சரியான ஊட்டச்சத்துகள் செரிமான மண்டலத்தில் சேர்வதற்கு உதவுகின்றன.
அன்னாசி பழச்சாறை அருந்துவதால் நல்ல உடல் வளர்ச்சியும், முன்னேற்றமும் காணப்படும். இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு, உடலில் நீர்ச்சத்தை சமன் செய்கிறது. நரம்புகள் தூண்டப்பட்டு, தசைகள் சுருங்கும் தன்மை சீராக்கப்படுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உகந்த தசை செயல்பாடு இருப்பது அவசியம். அவர்கள் அன்னாசி சாறை குடிப்பதன் மூலம் நல்ல பலனை அடையலாம்.
இந்த பழத்தை அதிகமாக உட்கொள்வதால் சில தீய விளைவுகளும் ஏற்படுகின்றன. அவை, கர்ப்ப கால சிக்கல்கள், நீரிழிவு பாதிப்புகள், எடை அதிகரிப்பு, ஒவ்வாமை, ரத்தப்போக்கு போன்றவை ஆகும். அன்னாசியை அளவாக உட்கொண்டால் சிறந்த பலன்களை அடையலாம் என்பது மருத்துவ நிபுணர்களின் கூற்றாக உள்ளது.