குற்றாலம் மெயின் அருவியில் இருந்த 12 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து மலைப்பகுதியில் விட்டனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்து வருகிறது. தற்போது சபரிமலை சீசன் என்பதால் தினமும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் வந்து மெயினருவி உள்ளிட்ட அருவிகளில் குளித்து செல்கின்றனர்.
விடுமுறை தினம் என்பதால் ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகள் வருகையும் இன்று அதிகளவில் இருந்தது. இந்நிலையில் மெயினருவியில் பெண்கள் குளிக்கும் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள படிக்கட்டில் சுமார் 12 அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பு ஊர்ந்தபடி சென்றது.
இதனை பார்த்த பெண்கள் அங்கிருந்து அலறியடித்தப்படி ஓடினர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வனத்துறையினர் வருவதற்குள் அந்த மலைப்பாம்பு புதருக்குள் சென்றுவிட்டது. அந்த பாம்பு எங்கு சென்றது என்று தெரியாததால் பெண்கள் செல்லும் பகுதியில் அருவியில் குளிக்க யாரையும் அனுமதிக்கவில்லை.
அருவி அருகே உள்ள புதருக்குள் வனத்துறையினர் மலைப்பாம்பை தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்களால் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே செங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் ராஜ்குமார், மாதவன், சிவக்குமார் உள்ளிட்டோர் வந்து அரைமணி நேர தேடுதலுக்கு பிறகு அருவி தண்ணீர் பாய்ந்தோடும் புதருக்குள் பதுங்கி இருந்த மலைப்பாம்பை பிடித்தனர்.
பின்பு அந்த மலைப்பாம்பு வனத்துறையினர் உதவியுடன் குற்றாலம் மலைப்பகுதியில் விடப்பட்டது.