பூந்தமல்லி அருகே மகனை கொலை செய்ததாக கைதான தாய், பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘மகனை கழுத்தை நெரித்து கொன்று, உடலில் மண்எண்ணெய் ஊற்றி எரித்தேன்’ என தெரிவித்து உள்ளார்.
சென்னை பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருடைய மகள் மீனாட்சி (வயது 27). இவர், கிருஷ்ணகிரியை சேர்ந்த சரவணன் (32) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் ஜெயகாந்த் என்ற மகன் இருந்தான். அந்த பகுதியில் உள்ள பள்ளியில் அவன் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.
கணவருடன் ஏற்பட்ட தகராறில் மீனாட்சி தனது மகனுடன் கடந்த 27-ந் தேதி தாய் வீட்டுக்கு வந்தார். 28-ந் தேதி இரவு மகனை கொன்று, தீ வைத்து எரித்தார்.
காதல் திருமணத்தால் பெற்றோரின் அரவணைப்பு இல்லாததால் மகனை கொன்று, தற்கொலைக்கு முயன்றதும், பயத்தில் தான் தற்கொலை செய்யவில்லை என்பதும் தெரிந்தது. இதையடுத்து மீனாட்சியை பூந்தமல்லி பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
பொலிசாரிடம் மீனாட்சி அளித்துள்ள வாக்குமூலத்தில், கிருஷ்ணகிரியை சேர்ந்த சரவணன், பூந்தமல்லியில் தங்கி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அதே தொழிற்சாலையில் நானும் வேலை செய்து வந்தேன். அப்போது எங்களுக்குள் காதல் மலர்ந்தது.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்களின் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்துக்கு பிறகு கிருஷ்ணகிரியில் வசித்து வந்தோம். எங்களுக்கு ஜெயகாந்த் பிறந்தான்.
எனது மாமியார் அடிக்கடி பணம் கேட்டு வந்ததால் எனக்கும், கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவருடன் கோபித்துக்கொண்டு எனது தாய் வீட்டுக்கு வந்து விடுவேன். இங்கும் எனக்கு அரவணைப்பு இல்லாததால் உடனடியாக கிருஷ்ணகிரிக்கு திரும்பி சென்று விடுவேன்.
மீண்டும் கணவருடன் தகராறு ஏற்பட்டதால் எனது மகனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்தேன். இதற்காக 27-ந் தேதி கிருஷ்ணகிரியில் இருந்து எனது தாய் வீட்டுக்கு வந்தேன்.
28-ந் தேதி காலை எனது மகனை மாங்காட்டில் உள்ள காமாட்சியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றேன். அங்கு எனக்கு மொட்டை போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். சரியான உணவு இல்லாததால் எனது மகன் ஜெயகாந்த், பாதி மயக்கத்தில் இருந்தான். இரவு அவன் தூங்கிக்கொண்டிருந்தபோது அவனது கழுத்தை நெரித்தேன்.
அதில் பாதி சுய நினைவின்றி ஜெயகாந்த் இருந்தான். பின்னர் நான் தயாராக வாங்கி வைத்திருந்த மண்எண்ணெயை அவன் மீது ஊற்றி தீ வைத்து எரித்தேன். அவன் உடல் கருகி இறந்த பிறகு உடலை வீட்டின் பின்புறம் உள்ள தரைமட்ட தொட்டியில் போட்டுவிட்டு, நானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். ஆனால் எனக்கு மயக்கம் வந்து விட்டதால் அப்படியே படுத்து விட்டேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர். கைதான மீனாட்சியை பொலிசார் புழல் சிறையில் அடைத்தனர்.