காட்டுப்புலம் – பாண்டவெட்டையில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் சென்ற பஸ் ஒன்று வீதியோரமாக வயலுக்குள் புதைந்ததில் மாணவர்கள் பெரும் பீதிக்குள்ளாகினர். அச்சத்தால் அலறிய அவர்கள் எதுவித சேதங்களுமின்றி மீட்கப்பட்டனர்
புதைந்திருந்த வாகனத்தை வெளியே எடுப்பதற்கு அதிகளவான இளைஞர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும் மூன்றரை மணிநேரத்தின் பின்னரே வாகனம் எடுக்கப்பட்டது.
குறித்த வீதியைத் திருத்துவதில் அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தொடர்ந்தும் அசமந்தப் போக்கினைக் கடைப்பிடித்து வருகின்றனர் என அவ்வூர் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சுழிபுரத்தில் உள்ள வெண்கரம் வள நிலையத்தில் மாணவர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதற்காக அராலி, பொன்னாலை, பாண்டவெட்டை – காட்டுப்புலம் பிரதேசங்களில் உள்ள வெண்கரம் படிப்பகங்களில் கல்வி பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் குறித்த பஸ்ஸில் ஏற்றி செல்லப்பட்டனர்.
பஸ் பாண்டவெட்டையில் இருந்து சுழிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது வீதியால் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு வழிவிட முற்பட்டபோது வீதியோரமாக – வயலுக்குள் – சரிந்து புதைந்தது. வீதியோரமாக இருந்து பெரிய கல் ஒன்றுடன் வாகனத்தின் அடிப்பகுதி தொடுகையுற்றதால் வாகனம் வயலுக்குள் குடை சாயும் நிலையில் இருந்து தப்பித்துக்கொண்டது.
இதன்போது மாணவர்கள் பெரும் பீதிக்குள்ளாகினர். எனினும், அவர்கள் வயலுக்கூடாக இறக்கப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் அங்கிருந்து கால்நடையாக சுழிபுரம் வெண்கரம் வள நிலையத்திற்கு கூட்டிச்செல்லப்பட்டனர். மாணவர்களுடன் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதைக் கேள்வியுற்ற பெற்றோர் அச்சமடைந்தவர்களாக அவ்விடத்தில் ஒன்றுகூடினர். எனினும் நிலமை சுமுகமாக்கப்பட்டது.
சுழிபுரத்தில் இருந்து வயற்பகுதிக்கூடாக பாண்டவெட்டை – காட்டுப்புலம் என்ற இரட்டைக் கிராமங்களுக்குச் செல்லும் ஒரு கிலோமீற்றர் நீளமான மேற்படி வீதி மிக மோசமாகச் சேதமடைந்துள்ளது.
மிகவும் ஒடுங்கிய நிலையில் காணப்படும் இந்த வீதியூடாகச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி தடம்புரள்வதும் சேதமடைவதுமாக உள்ளன. அடிக்கடி ஏற்படும் விபத்துக்களால் பலர் காயமடைந்துள்ளனர்.
இப்பிரதேசத்தில் நோய்களுக்கு இலக்காவோரை இவ்வீதியூடாக விரைவாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த வீதியைத் திருத்தித் தருமாறு பிரதேச மக்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனினும், அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தொடர்ந்தும் பாரமுகமாக இருந்து வருகின்றனர் என அந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவ்வீதியைத் திருத்துமாறு அப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் எஸ்.கிருஸ்ணராசா வலி.மேற்கு பிரதேச சபையில் கொண்டுவந்த பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதிலும் அது கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டார்.