கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையில் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே அவரை எதிர்வரும் 08ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி கொழும்பு – வெலிக்கட சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின்போது 27 சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்டனர்.
சிறைச்சாலைக்குள் நுழைந்த ஆயுதம்தாங்கிய விசேட அதிரடிப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் இதில் 27 கைதிகள் பலியானதோடு பலர் காயமடைந்ததாகவும் தெரிவித்து வழக்கும் தொடரப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அப்போதைய சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லாமாஹேவா மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதகரான நியூமல் ரங்கஜீவ ஆகியோர் இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் ரங்கஜீவவுக்கு பிணை அனுமதி வழங்கப்பட்ட நிலையில் முன்னாள் சிறைச்சாலை ஆணையாளருக்கு இன்று வரை விளக்கமறியல் உத்தரவு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய அவர் இன்று செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்பாக முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் இன்று தெரிவித்தனர்.
இந்த விசாரணைகளுக்கு அமைவான இரசாயண பகுப்பாய்வு திணைக்கள அறிக்கை இதுவரை கிடைக்காமையின் காரணமாக சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு இரகசியப் பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.
இதனை கவனத்திற்கொண்ட நீதவான், முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனுக்கான விளக்கமறியலை எதிர்வரும் 08ஆம் திகதிவரை நீடிப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.