சபரிமலையில் இன்று ஐயப்பனை தரிசித்த இளம்பெண்களின் வீடுகள் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சபரிமலை கோவிலுக்கு இன்று போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனை தரிசித்த இளம்பெண்கள் இருவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் பிந்து (வயது 44), கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டியை சேர்ந்தவர். ஏற்கனவே இவர் சபரிமலை சென்றபோது இவரது வீடு மீது ஐயப்ப பக்தர்கள் தாக்குதல் நடத்தினர். இதுபோல மலப்புரம் அங்காடிபுரத்தை சேர்ந்த கனகதுர்கா (42) வீடு மீதும் தாக்குதல் நடந்தது.
இன்று அதிகாலையில் இவர்கள் இருவரும் மீண்டும் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்தனர். இந்த தகவல் வெளியானதும் மர்ம நபர்கள் சிலர் பிந்து, கனகதுர்கா வீடுகள் முன்பு திரண்டனர். அவர்களுக்கு எதிராக கோஷமிட்டபடி போராட்டத்திலும் ஈடுபட்டனர். சிலர் வீடுகள் மீது கல்வீசவும் செய்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.