ரஷியாவின் செல்யாபின்ஸ்க் பிராந்தியத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் 48 வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.
ரஷியா நாட்டின் செல்யாபின்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள மாக்னிடோகோர்ஸ்க் நகரில் உள்ள பத்து மாடிகளை கொண்ட குடியிருப்பின் ஒரு வீட்டில் கடந்த திங்கட்கிழமை கியாஸ் கசிவு ஏற்பட்டதால் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் 48 வீடுகள் இடிந்து விழுந்தன.
இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது. அப்பகுதியில் நிலவிவரும் கடுமையான பனிமூட்டம் மற்றும் குளிருக்கு இடையில் இருநாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்று மாலை நிலவரப்படி இவ்விபத்தில் சிக்கி உயிரிழந்த 21 பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு வசித்தவர்களில் மேலும் 20 பேரை காணவில்லை என உறவினர்கள் குறிப்பிட்டுள்ளதால் தேடுதல் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் இடிபாடுகளில் சிக்கி சுமார் 36 நேரத்துக்கு பின்னர் மீட்கப்பட்ட 11 மாத ஆண் குழந்தை முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் சுமார் 1400 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாஸ்கோ நகருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. கடுமையான தலைக்காயத்தால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு மாஸ்கோ நகரில் உள்ள குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.