பூமியில் இருந்து 11 கோடி கி.மீ. தொலைவில் உள்ள குறுங்கோள் சுற்றுப்பாதையில் நுழைந்து நாசாவின் விண்கலம் சாதனை படைத்துள்ளது.
விண்வெளியில் ஏராளமான குறுங்கோள்கள் (விண்கற்கள்) உள்ளன. அதில் பென்னு என்றழைக்கப்படும் குறுங்கோள் பூமியில் இருந்து 11 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. அதை ஆய்வு செய்ய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ‘ஓசிரிஸ்-ரே’ எனப்படும் செயற்கை கோளை அனுப்பியது.
பல ஆண்டுகளாக பயணம் மேற்கொண்ட அந்த விண்கலம் பென்னு குறுங்கோளின் சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது. இது திறமைமிக்க நடவடிக்கை என அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானி டான்டி லாரேட்டா தெரிவித்தார். இவர் ‘ஓசிரிஸ்-ரே’ செயற்கை கோளை உருவாக்கியவர்.
‘பென்னு’ குறுங்கோளின் சுற்றுப் பாதையில் இந்த செயற்கை கோள் நுழைந்தது வியக்கத்தக்க சாதனையாகும். இதற்காக தான் நாங்கள் பல ஆண்டுகளாக திட்டமிட்டு பணியாற்றினோம்.
இதற்கு முன்பு எந்த ஒரு குறுங்கோளையும் மிக நெருக்கத்தில் அதாவது 1.75 கி.மீட்டர் நெருக்கத்தில் செயற்கை கோள்கள் சென்றடைந்ததில்லை. தற்போது முதன் முறையாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட செயற்கை கோள் ஒரு குறுங்கோளின் சுற்றுப்பாதையை சென்றடைந்துள்ளது.
இதற்கு முன்பு 2016-ம் ஆண்டில் ரோசட்டா விண்கலம் ‘காமட்-67’ என்ற குறுங்கோளை 7 கி.மீட்டர் தூர சுற்றுப்பாதையில் நெருங்கியது.
பென்னு குறுங்கோள் மிகவும் குறைந்த புவியீர்ப்பு சக்தி கொண்டது. இருந்தும் ‘ஓசிரிஸ்-ரே’ செயற்கை கோள் மிக நெருக்கத்தில் சுற்றுப்பாதைக்குள் சென்றடைந்துள்ளது.
பிப்ரவரி மாத மத்தியில் இன்னும் நெருங்கி பென்னு குறுங்கோளை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பும் என எதிர்பர்க்கப்படுகிறது.