தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் பிரபாகரன் மேற்கொண்ட பிரசாரங்களையும் விட ஆபத்தானது என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,புதிய அரசியலமைப்பின் சட்டமூலம் எதிர்வரும் பெப்ரவரியில் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படுவதாக தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லை. தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையையே சுமந்திரன் மேற்கொண்டுவருகின்றார்.
மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்து அரசியலமைப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவருவதாக சுமந்திரனின் பிரசாரம் தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும்.
அவரின் பேச்சுக்கள் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை பிளவுபடுத்தக்கூடியதாகும்.
அவரின் இந்த செயல் விடுதலைப்புலி இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் பிரசாரங்களையும்விட ஆபத்தானது. இந்நிலையில். சுமந்திரன் இதனை நிறுத்திக்கொள்ளவேண்டும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.