யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்தியர் வேடத்தில் தங்கநகைகளை திருடிய பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.யாழ் போதனா வைத்தியசாலையில் தங்க நகைகளை திருடியது மட்டுமல்ல, நல்லூர் நல்லூர் ஆலயத் திருவிழாக்
காலத்தில் இந்த பெண், சங்கிலி அறுத்த விடயமும் விசாரணைகளில் தெரியவந்தது.வைத்தியசாலையில் நோயாளியிடம் திருடிய குற்றச்சாட்டு வழக்கில் பிணை வழங்கிய நீதிமன்றம், நல்லூர் ஆலயத்தில் பெண்ணிடம் சங்கிலியை கொள்ளையடித்த வழக்கில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
யாழ்.போதனா வைத்திய சாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் தங்க நகைகள் களவாடப்படுவது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு தொடர்ச்சியாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.அது தொடர்பில் வைத்தியசாலை வளாகத்தினுள் பொருத்தப்பட்டு உள்ள சிசிரிவி கமராவின் உதவியுடன் நகைகளை திருடி வந்த பெண்கள் குழு அடையாளம் காணப்பட்டார். அவரை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் துணையுடன் வைத்தியசாலை நிர்வாகம் மடக்கிப் பிடித்தது.
ஒரு யுவதி மாட்டினார். மற்றவர் தப்பிச் சென்றார். மாட்டியவரும் பின்னர் வைத்தியசாலை உத்தியோகத்தர்களிற்கு டிமிக்கி கொடுத்து தப்பினார். அவரது கைத்தொலைபேசி வைத்தியசாலை நிர்வாகத்திடம் சிக்கியது. கைத்தொலைபேசி, சிசிரிவி காட்சி ஆதரத்துடன் யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
எனினும், பொலிசார் மெத்தனமாக இருக்க, கடந்த சனிக்கிழமையும் வைத்தியசாலைக்குள் அந்த யுவதி கைவரிசை காட்டினார். வயோதிப பெண்ணொருவரிடம் இருந்து சங்கிலியை அபேஸ் செய்தார். அந்த வயோதிபப் பெண் வைத்தியசாலை நிர்வாகத்திடம் முறையிட்டார்.அதனை அடுத்து, கண்காணிப்பு கமராக்களை பரிசோதித்த போது, வைத்தியசாலையில் முன்னர் நகைகளை திருடி மாட்டிய யுவதியே மீண்டும் திருட்டில் ஈடுபடுவதனை நிர்வாகத்தினர் கண்டறிந்தனர்.
அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்தனர். சிசிரிவி காட்சிகளை ஆராய்ந்த யாழ்ப்பாணம் பொலிஸார், அந்தப் பெண்ணை முல்லைத்தீவில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்தனர். அத்துடன், மேலும் இரண்டு பெண்கள் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
அந்தப் பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நல்லூர் ஆலயத் திருவிழாக் காலத்தில் பெண்ணொருவரிடம் சங்கிலி அறுத்தததையும் அவர் ஒத்துக்கொண்டார். அந்தச் சங்கிலி நகை வேலை செய்பவரிடம் விற்பனை செய்ததையும் சந்தேகநபர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நகை வேலை செய்பவரை அழைத்து விசாரணை செய்த பொலிஸார், சந்தேகநபரால் விற்பனை செய்யப்பட்ட சங்கிலி உருக்கப்பட்டு தங்கக் கட்டியாக மீட்டனர். அதனால், நகை வேலை செய்பவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளியிடம் தங்க நகையைத் திருடியமை மற்றும் நல்லூர் ஆலயத் திருவிழாக் காலத்தில் பெண் ஒருவரிடம் சங்கிலி அறுத்தமை என இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு தனித் தனியே வழக்குகளைப் பதிவு செய்தனர்.
சந்தேகநபரான பெண், அவருடன் கைது செய்யப்பட்ட மேலும் மூவர் மற்றும் நகை வேலை செய்பவர் என 5 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் அன்ரனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் நேற்று முற்படுத்தப்பட்டனர். அத்துடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நகைப் பறிகொடுத்த வயோதிப் பெண்ணும், நீதிமன்றில் முன்னிலையானார்.
வழக்குகளை விசாரணை செய்த நீதிவான், சந்தேகநபருடன் கைது செய்யப்பட்ட மூவரையும் நகைத் தொழிலாளியையும் பிணையில் விடுவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திருடிய நகை சந்தேகநபரிடம் மீட்கப்பட்டதால், அந்த வழக்கில் அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. மற்றைய வழக்கில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, யாழ் சிறைச்சாலைக்கு யுவதி அனுப்பப்பட்டார்.