அவுஸ்திரேலியாவின் நவுருத்தீவில் அமைந்திருக்கும் அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்த உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அகதிகளின் குழந்தைகள் வெளியேற்றப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முறையான மருத்துவமின்றி குழந்தைகள் பாதிக்கப்படுவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் குடும்பங்களுடன் குழந்தைகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கிறிஸ்மஸுக்கு முன்னதாக மூன்று குடும்பங்களையும் அவர்களது குழந்தைகளையும் அவுஸ்திரேலியாவுக்கு மாற்றியுள்ளதாக அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
நவுருத்தீவில் அடைக்கப்பட்டுள்ள குழந்தைகள் முறையான வைத்திய சிகிச்சையின்றித் தவிப்பதாக அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்கொன்று தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை நடத்துவதற்காக சுமார் இரண்டரை கோடி ரூபாயினை (5 லட்சம் அவுஸ்திரேலிய டாலர்கள்) அவுஸ்திரேலிய அரசு செலவு செய்துள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலிய அரசு தானாக முன்வந்து குறித்த குழந்தைகளை இடம்மாற்றியதா? அல்லது நீதிமன்ற உத்தரவின் கட்டாயத்தால் அவுஸ்திரேலியாவுக்கு இடம் மாற்றியுள்ளதா? என்பது தொடர்பாகத் தெளிவாகத் தெரியவரவில்லை.