வெள்ளைக்கொடி விவகாரத்தில் காட்டிக்கொடுத்த சரத் பொன்சேகா என்னை இழிவாக பேசுவதா என நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மைக்காலமாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மற்றும் பாலித தெவரபெரும ஆகியோருக்கு இடையில் உச்சக்கட்ட கருத்து மோதல் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரபெரும மீது சுமத்திய குற்றங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சரத் பொன்சேகா தொடர்பான காரசாரமான கருத்துக்களை தெவரபெரும பகிர்ந்துள்ளார்.
காகம் தலையில் எச்சமிட்டது என்பதற்காக காகங்களை சுட்டுக் கொல்லச் சொன்ன பொன்சேகா, அப்பத்தை ஒழுங்காக சுடவில்லையென சிப்பாய்களை முழந்தாளிடச் செய்த பொன்சேகா, வெள்ளைக்கொடி விவகாரத்தில் காட்டிக்கொடுத்த பொன்சேகா என்னை இழிவாக பேசுவதா? என பாலித தெவரபெரும கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் மூளை இல்லாவிடில் உடம்பை பெரிதாக வைப்பதில் அர்த்தமில்லை, கடற்படையில் சாரதியாக இருந்து தப்பியோடியவர் தெவரபெரும. இப்படியானவர்களை அரசியலுக்கு வரவிடக் கூடாது. இனி இவருக்கு வேட்புமனு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இவரை நாடாளுமன்றத்திற்கு வர விடமாட்டேன். கசிப்பு காய்ச்சியவரே இந்த தெவரபெரும என நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.